பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

கெடிலக்கரை நாகரிகம்


உள்ளது. கடலுர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் செல்லும் பேருந்து வண்டியில் பயணஞ்செய்தால், இவ்வூர்ச் சிவன் கோயில் அருகே இறங்கலாம். மக்கள் தொகை 4,350. இவ்வூரை 1760இல் ஆங்கிலேயர் கைப்பற்றினர்.

இவ்வூர்ச் சிவன் கோயிலின் பெயர் ‘அருள் துறை என்பது.’ *[1] ‘வெண்ணெய் நல்லூர் ‘அருள் துறையுள் அத்தா’ என்னும் சுந்தரர் தேவாரப்பாடற் பகுதியால் இதனை அறியலாம். இஃதன்றி, கிருபாபுரீசுரர் கோயில், தடுத்தாட்கொண்ட நாதர் கோயில் என்ற பெயர்களும் உண்டு. சிவன் பெயர்: தடுத்தாட்கொண்ட நாதர்; அம்மன் பெயர் வேற்கண்ணம்மை இவ்வூர்க்கு மேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ள மணம் தவிர்ந்த புத்துரில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுந்தரர் திருமணத்தை, சிவன் ஒரு கிழ அந்தணனாய் வழக்கிட்டுத் தடுத்து இவ்வூர் அறமன்றத்திற்கு அழைத்து வந்து வழக்கில் வென்று சுந்தரரை ஆட்கொண்டதாகச் சொல்லப்படும் வரலாறு அறிந்ததே. இதற்குச் சான்றாக, இவ்வூருக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் ‘தடுத்தாட்கொண்ட ஊர்’ என்னும் ஒர் ஊர் இருப்பதும், இவ்வூர்க் கோயிலில் ‘வழக்கு வென்ற திரு அம்பலம்’ என்னும் பெயருடைய நூற்றுக்கால் மண்டபம் இருப்பதும் குறிப்பிடத்தக்கவை. சுந்தரர்’ பித்தா பிறை சூடி’ என்று தொடங்கும் தமது முதல் பதிகத்தைப் பாடியது இவ்வூரில் தான். சிவன் கோயிலுக்குள் சுந்தரர்க்கு ஒரு சிறு கோயில் உள்ளது. இவ்வூருக்கு அருணகிரிநாதரின் திருப்புகழும் உண்டு.

முதல் சந்தான குரவராகிய மெய்கண்ட தேவர் வளர்ந்து உருவாகி, சைவ சித்தாந்தத் தலைநூலாகிய ‘சிவஞான போதம்’ என்னும் உயரிய நூலைப் பாடியருளியதும் இவ்வூரிலேதான். மெய்கண்ட தேவரின் அடக்கத்தின் (சமாதியின்) மேல் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஊரில் மெய்கண்டார் பெயரில் மடம் ஒன்றும் உள்ளது. திருவாவடுதுறை ஆதீன அடிகளார் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் விசயதசமியில் இங்கே சைவ சித்தாந்த மாநாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

‘கம்பரை வளர்த்து உருவாக்கிய வள்ளல் சடையப்ப முதலியார் வாழ்ந்ததும், கம்பர் கல்வியறிவிற் பெரியவராய் உருவாகிப் பாடல் இயற்றத் தொடங்கியதும் திருவெண்ணெய் நல்லூரில்தான்’ என்பது உலகறிந்த செய்தி. ஆம், திருவெண்ணெய் நல்லூர் என்பது உண்மைதான்! ஆனால், எந்தத் திருவெண்ணெய் நல்லூர் என்பதிலே கருத்து வேற்றுமை


  1. *சுந்தரர் தேவாரம் - திருவெண்ணெய் நல்லூர்ப் பதிகம்.