பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

301


உண்டு. சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் ஒரு திருவெண்ணெய் நல்லூர் உண்டு. கம்பர் சோழ நாட்டில் பிறந்தவராதலால், அவரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்தது சோழ நாட்டுத் திருவெண்ணெய் நல்லூர்தான் என்று ஆராய்ச்சியாளர் சிலர் அறிவித்துள்ளனர். கேட்பதற்கு இச்செய்தி பொருத்தமாகவும் சுவையாகவும் இருப்பினும், தொன்று தொட்டுப் பல்லாண்டுகளாய் ஆராய்ச்சியாளர் பலர் கூறி வருவது திருக்கோவலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூரைத்தான்! இக்கருத்து வேற்றுமைக்குத் திட்ட வட்டமான ஒரு முடிவு இன்னும் கிடைத்தபாடில்லை. ஆயினும், திருக்கோவலூர் வட்டத்துத் திருவெண்ணெய் நல்லூர்தான் சடையப்ப வள்ளலின் ஊர் என்பவர்கட்கும் சான்றுகள் கிடைக்காமலில்லை; இந்தத் திருவெண்ணெய் நல்லூரில் இப்போது சத்திரம் இருக்கும் இடத்தில்தான், அன்று சடையப்ப வள்ளல் வாழ்ந்த இல்லம் இருந்தது என்று மக்களால் சொல்லப்படுகிறது. மற்றும், இப்போது ஏரிக்கரையில் இருக்கும் பிள்ளையார் கோயிலில்தான், அப்போது கம்பர் முதல் முதலாகப் பாடல் எழுதினார் என்றும் சொல்கின்றனர்.

இங்கே, பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர மன்னர் முதலிய பேரரசர் காலத்துக் கல்வெட்டுகளும் மற்றுஞ் சில சிற்றரசர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இவ்வூர், இறைவன்மேல் உள்ளூர்ப் புலவராகிய இராசப்ப நாவலர் என்பார் திருவெண்ணெய்க் கலம்பகம் என்னும் நூல் இயற்றியுள்ளார். அம்பிகை வெண்ணெய்க் கோட்டை கட்டி நோன்பியற்றி இறைவனது அருள் பெற்ற ஊர் ஆதலின் வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றதாக நூல்கள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் அர்ச்சுனன் (தீர்த்தயாத்திரை) தெய்வ நீராடல் மேற்கொண்டு தென்னாடு வந்தபோது திருவெண்ணெய் நல்லூருக்கும் வந்து வழிபட்டானாம். இதனை வில்லி பாரதம் - ஆதி பருவம் அருச்சுனன் தீர்த்தயாத்திரைச் சருக்கத்திலுள்ள,

"ஐயானனன் இயல்வாணனை அடிமைக்கொள மெய்யே

பொய்யாவணம் எழுதும்பதி பொற்போடு வணங்கா “

என்னும் பாடல் (17) பகுதியால் அறியலாம். ஐயானனன் என்றால் சிவன், இயல்வாணன் என்றால் சுந்தரர்; சிவன் சுந்தரரை ஆட்கொள்வதற்காகப் பொய் ஆவணம் எழுதிய பதி திருவெண்ணெய் நல்லூர். இந்தப் பதியையும் அர்ச்சுனன் வணங்கியதாகப் பாரதப்பாடலில் வில்லிபுத்துரார்