பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

கெடிலக்கரை நாகரிகம்


தெரிவித்துள்ளார். இவ்வாறு பல்வேறு பெருமைகட்கு உரியதாயுள்ள இவ்வூர், திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராய் இப்போது விளங்குவதில் வியப்பில்லை. சுந்தரர் காலத்தில் உயர்நீதி மன்றம் இருந்த ஊராயிற்றே!

மலட்டாறா? பெண்ணையாறா?

சுந்தரரின் திருவெண்ணெய் நல்லூர்த் தேவாரப்பதிகத்தைப் படிப்பவர்க்குக் கட்டாயம் ஒர் ஐயம் எழும். சுந்தரர் அப்பதிகத்தில்,

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்

நல்லூர் அருள்துறை....."

என்று, திருவெண்ணெய் நல்லூர் பெண்ணையாற்றின் தென்கரையில் இருப்பதாகப் பாடியுள்ளார். ஆனால் ஊர் இப்போது இருப்பதோ மலட்டாற்றின் தென்கரையில் இதற்கு என்ன பதில் சொல்லுவது?

திருவெண்ணெய் நல்லூருக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் பெண்ணையாறு ஒடுகிறது. இடையிலே ஊரையொட்டி மலட்டாறு ஒடுகிறது. பெண்ணையாற்றுக்கும் ஊருக்கும் இடையே 5 கி.மீ. தொலைவு இருப்பினும், பெண்ணை யாற்றுக்குத் தென்திசையில் ஊர் இருப்பதால் சுந்தரர் பாடியிருப்பது பொருத்தம் என்று சொல்ல முடியாது. பெண்ணையின் தென்கரைக்கு மிக அண்மையில் ஊர் இருந்தால்தான், சுந்தரர் பாடியிருப்பது பொருத்தமாகும். 5 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருப்பதை ஆற்றங்கரையில் இருப்பதாகப் பாடமுடியாது. மேலும், மலட்டாறு என்னும் ஆற்றின் கரையில் இருப்பதைப் பெண்ணையாற்றின் கரையில் இருப்பதாக எவ்வாறு பாடமுடியும்?

மலட்டாறு பெண்ணையாற்றிலிருந்து பிரிவதால் மலட்டாற்றையும் பெண்ணையாறாகவே கருதி, மலட்டாற்றங் கரையில் இருக்கும் ஊரைப் பெண்ணையாற்றங்கரையில் இருப்பதாகச் சுந்தரர் பாடி விட்டார் என்று கூறுவதும் பொருந்தாது. அங்ங்னமெனில், எதுதான் பொருந்தும்? இப்போது மலட்டாறு இருக்கிறதே, அதுதான் பெண்ணை யாற்றின் பழைய பாதை என்று சொல்வதே பொருந்தும்.

பண்டு பெண்ணையாறு திருவெண்ணெய் நல்லூரை ஒட்டி ஒடிக்கொண்டிருந்தது. இடையிலே ஒரு பெருவெள்ளத்தின்