பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

கெடிலக்கரை நாகரிகம்


எனப்படும் காடவராயர் மரபு மன்னர்களும் அரசோச்சியுள்ளனர். இங்கே எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டளவில் நரசிங்க முனையரையர் என்னும் மன்னர் ஆட்சி புரிந்த வரலாறு பற்றியும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் கோப் பெருஞ்சிங்கக் காடவராயன் அரசோச்சிய வரலாறு குறித்தும், இந்நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம். கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராசராச சோழனைச் சிறை வைத்தது இவ்வூர்க் கோட்டையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சேந்தமங்கலத்தில் கோட்டையும் கோயிலும் இணைப்பாக உள்ளன. கோட்டை மதிலுக்குள் கோயில் இருக்கிறது என்றே சொல்லலாம். அந்தக் காலத்தில் பலவிடங்களில் கோயில்கள் கோட்டைகளாகப் பயன்படுத்தப்பட்டமை வரலாறு கண்ட உண்மை ‘பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்’ என்றார் பாரதியார் அன்று! இன்று, கோட்டைத்தலம் அனைத்தும் கோயில் செய்தார்களா அல்லது கோயில் தலம் அனைத்தும் கோட்டை செய்தார்களா என்று தெரியவில்லை. கோயில் கோட்டையைச் சுற்றி அகழி உண்டு. இப்போது அகழியின் மேற்குப்பகுதி ஒரு கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து வருபவர்கள் இந்தப் பாலத்தைக் கடந்துதான் கோட்டைக்குச் செல்ல வேண்டும். இந்தப் பாலத்தைக் கடந்ததும், மண்பாதை போகப்போக உயரமாகிச் சில அடிதொலைவில் வடக்கு நோக்கித் திரும்புகிறது.