பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

கெடிலக்கரை நாகரிகம்


வேலைப்பாடுகளும் மிகுதி. திருச்சுற்றுச் சுவர்களில் காணப்படும் கருங்கல் பலகணிகள் (சன்னல்கள்) கவர்ச்சியான வேலைப்பாட்டுடன் கூடியவை. மேற்குச் சுற்றில் உள்ள குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி திருடன் கோயில் எனப் பெயர் சொல்லப்படுகிறது. இடிபாடுகளையும் செடி, கொடி புதர்களையும் ஊடுருவிக் கொண்டு சென்று திருடன் கோயிலை அடையவோ தெளிவாகக் காணவோ முடிய வில்லை. திருடன் கோயில் எனப் பெயர் வந்ததன் காரணத்தை அங்கிருந்தவர்களால் தெளிவுபடுத்த முடியவில்லை. கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருடர்கள் வழிபடும் பகுதியோ என்னவோ! மொத்தத்தில் கோட்டையும் கோயிலும் பாழடைந்த நிலையிலும் ஒருவகைக் கவர்ச்சியுடன் காணப்படுகின்றன;

பாழடைந்து விட்டதால் வரலாற்றுப் பெருமைக்கு உரியனவாய் விட்டன. இடிபாடுகளின் பாழ்த்தோற்றம், கவனிப்பாரற்ற நிலையினால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை; போரில் பகை மன்னரால் இடியுண்டு பாழ்படுத்தப்பட்டதாகவே தேர்ன்றுகிறது. எலியுடன் சேர்ந்த தவளையைப்போலக் கோட்டையுடன் சேர்ந்ததால் கோயிலுக்கும் கேடு நேர்ந்தது. பாழ்பட்டுக் கிடக்கும் கோட்டையையும் கோயிலையும் பிரிய மனம் வரவில்லை. கோட்டைக் கோயிலைச் சுற்றிக் கோட்டை வெளிமதில்கள் சிதைந்த நிலையில் இன்றும் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றன. இக் கோட்டை மதிலின் படத்தையும் உரிய விவரங்களையும், இந்நூலில் கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பிலுள்ள ‘கோப்பெருஞ்சிங்கன்’ என்னும் உட்பிரிவில் (பக்கம் : 156) காணலாம்.