பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

319



இவ்வூரை யொட்டி மேற்கேயுள்ள புதுப்பேட்டை - சித்தவட மடத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் முடிமேல் சிவன் தன் திருவடிகளைச் சூட்டியதாகச் சொல்லப்படும் [1] பெரிய புராண வரலாறு குறிப்பிடத்தக்கது.

திருவதிகை

திருவதிகை, பண்ணுருட்டி நகருக்குக் கிழக்கே பண்ணுருட்டி புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. திருவதிகையின் மேற்கு எல்லையில் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட (Major District Road) நெடும் பாதையும் கடலூர் திருக்கோவலூர் மாநில (State Highways) நெடுஞ்சாலையும் ஒன்று கூடி, பண்ணுருட்டியின் மேற்கு எல்லையில் மீண்டும் தனித்தனியே பிரிந்துவிடுகின்றன. கடலூருக்கு மேற்கே 24 கி.மீ. தொலைவில் திருவதிகை இருக்கிறது. பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் திருவதிகையில்தான் இருக்கிறது.

திலகவதியாரும் திருநாவுக்கரசரும் திருக்தொண்டுபுரிந்த இடம் திருவதிகை, பாடலிபுத்திரத்தில் சமணத் தலைவராய் விளங்கிய நாவுக்கரசர் மீண்டும் வந்து சைவராக மாறி, ‘கூற்றாயினவாறு’ என்று தொடங்கும் முதல் தேவாரப் பதிகம் பாடிச் சூலை நோய் நீங்கப் பெற்ற இடம் திருவதிகை; நாவுக்கரசரால் சைவனாக மாற்றப்பட்ட மகேந்திரவர்ம பல்லவன், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணக் கோயிலை இடித்துக் கொண்டுவந்து ‘குணபரேச்சரம்’ என்னும் பெயரில் ஒரு சைவக்கோயில் கட்டிய இடம் திருவதிகை, சிவபெருமான் தனது புன்னகையால் முப்புர அரக்கர்களை எரித்ததாகச் சொல்லப்படும் இடம் திருவதிகை, வீரட்டானங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் இடம் திருவதிகை தமிழகத்திலேயே முதல் முதலாகத் தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்கு உரிய பதி திருவதிகை, திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள் பதினாறும், திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றும், சுந்தரரின் பதிகம் ஒன்றும், அருணகிரியாரின் திருப்புகழ் இரண்டும், பிற்காலப் புராணம் ஒன்றும், மான்மியம் ஒன்றும், உலா ஒன்றும், தொண்ணுற்றாறு கல்வெட்டுகளும் பெற்றுத் திகழும் இடம் திருவதிகை, சிறந்த சைவசித்தாந்த நூலாகிய ‘உண்மை விளக்கம்’ இயற்றிய ‘திருவதிகை மனவாசகங் கடந்தார்’ என்னும் பெரியார் பிறந்த இடம் திருவதிகை அருகிலுள்ள அணையால் செழிப்புற்றுத் திகழும் இடம் திருவதிகை.


  1. *பெரிய புராணம் - தடுத்தாட் கொண்ட புராணம்: 85 - 87.