பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

கெடிலக்கரை நாகரிகம்



இந்த விமானத்தின் உச்சி நிழல் நிலத்தில் விழுவதில்லை என்று சொல்லப்படுகிறது. அடிப்படை அகன்றிருத்தலின் நிழல் அதற்குள்ளேயே அடங்கிவிடுகின்றது போலும். கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் - விமானத்தின் மேற்கே பல இலிங்கங்கள், உள்ளன; எல்லாம் பல்லவர் காலத்தவை; அவற்றுள், ஐந்து முகங்களையுடைய இலிங்கம் ஒன்றுள்ளது; ‘முகலிங்கம்’ என அழைக்கப்படும் இது காணத்தக்கது. கோயிலில் சிற்பச் சிறப்பிற்குக் குறைவில்லை.

வீரட்டானர் கோயிலுக்குள், திலகவதியார்க்கும் திருநாவுக் கரசர்க்கும் தனித்தனிச் சிறு கோயில்கள் உள்ளன. வெளிக் கோபுரத்தைத் தாண்டிக் கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே வலக்கைப் புறமாக ஒரு சமணச் சிலை தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் காணலாம். அதன் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் பார்க்கலாம்:

இந்தச் சிலை, ஒரு மன்னனது தோற்றத்தையும் சமண சமயக் குறிகளையும் குறிக்கிறது; எனவே, அப்பர் காலத்தில் சமண சமயத்தைத் தழுவியிருந்த பல்லவ மன்னனைக் குறிக்கும் சிலையாக இருக்கலாம் என உய்த்துணரப்படுகிறது. இதற்குச் சான்று பகரும் முறையில் கோயில் பெருவிழாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது; அஃதாவது, சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதற்காக நாவுக்கரசரைப் பல்லவன் யானையைக் கொண்டு இடறச் செய்தான் அல்லவா? அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பதிலடி கொடுக்குமுறையில் ஆண்டுதோறும் பெருவிழாக்