பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

கெடிலக்கரை நாகரிகம்


மெய்யாகம அதிகைத்திரு விரட்டமும் நேமிக்

கையான கீந்திரபுர முங்கண்டுகை தொழுதான்.”

இந்தச் செய்தியினால் திருவதிகையின் சிறப்பு மேலும் புலனாகிறது.

திருவதிகையில் சித்திரைத் திங்களில் பத்துநாள் பெருவிழா (பிரம்மோற்சவம்) நடைபெறும். அப்பர் வீடுபேறுற்ற சதய நாளுடன் விழா நிறைவுறும் தேரோடும் நாளில், சிவன் முப்புரம் எரித்த விழா நடைபெறும். இவ் விழாக்காட்சி ஆற்று மணலில் நடைபெறும். பத்துநாள் விழாவில் இஃது ஒருநாள் விழா. சித்திரைச் சதயத்தன்று பெருந்திரளான மக்கட் கூட்டத்தைத் திருவதிகையில் காணலாம். கார்த்திகைத் திங்களில் சோமவார விழா இங்கே சிறப்பாக நடைபெறும்.

அரசர்களிடையே அதிகை

திருவதிகை, கல்வெட்டிலும் தேவாரத்திலும் ‘அதியரை மங்கை’ எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயரின் அடித்தளத்தில் என்ன வரலாறு அடங்கியிருக்கிறதோ தெரியவில்லை. அதிகமான் (அதியமான்) மரபினர் இவ்வூரை ஒரு காலத்தில் ஆண்டதாலோ அல்லது கோயிலுக்குத் திருப்பணி செய்ததாலோ திரு அதிகை எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதிகைமான் என்னும் பட்டப் பெயருடைய சமணச் சிற்றரசர் சிலர் எட்டாம் நூற்றாண்டில் திருவதிகையைத் தலைநகராகக் கொண்டு சுற்றுப்புற வட்டாரத்தை ஆண்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில் ‘அதிகை என்னும் பெயர் உருவானதாகக் கருதப்படுகிறது.

இஃதிருக்க, நிருபதுங்கவர்மப் பல்லவ மன்னன் (855 - 896) காலத்துக் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘அதிராஜ மங்கலியபுரம்’ எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிராஜ மங்கிலியபுரம்’ என்னும் பெயருக்கும் முன்பு சொன்ன ‘அதியரை மங்கை’ என்னும் பெயருக்கும் தொடர்பு இருப்பதாக உய்த்துணர முடிகிறது. அதிராஜன் என்றாலும் அதியரையன் என்றாலும் ஒன்றுதான் அரையன் - அரசன் - ராஜன். மங்கலியத்திற்கும் மங்கைக்கும் தொடர்பு உண்டு. சிவபெருமான் இங்கே வந்து மங்கை உமையம்மையை மணந்து சென்றதாகவும், அதனால் அம்மன்கோயில் வலப்பக்கம் இருப்பதாகவும் முன்னரே கூறப்பட்டுள்ளது. உமையம்மைக்கு மங்கலி என்ற பெயரும் உண்டு. எனவே, இப்படியொரு புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு அதியரை மங்கை, அதிராஜ மங்கலியபுரம் என்னும் பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம்.