பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

கெடிலக்கரை நாகரிகம்


குதிரைகளும் தங்குவதற்கு இடமும் உண்ண உணவும் அளிக்கும் வசதி அவ்வூரில் இருந்திருக்கவேண்டும். சோழப் பேரரசின் மேலாட்சியின் கீழ் ஒரு சிற்றரசன் திருவதிகையைத் தலைநகராகக்கொண்டு அந்தவட்டாரத்தை ஆண்டிருப்பான். அதனால்தான் குலோத்துங்கன் அங்கே பெரும் படைகளுடன் தங்க வசதி கிடைத்தது. இதைக் கொண்டு, அன்றைய திருவதிகை நகரின் தரத்தை அறியலாம். முதற் குலோத்துங்கனது ஆட்சிக் காலம் கி.பி. 1070 தொட்டு 1120வரை ஆகும். அவனது கலிங்க வெற்றியைக் கலிங்கத்துப் பரணி என்னும் நூலாகப் பாடிய புலவர் சயங்கொண்டார், அவனுடைய அவைக்களப் புலவராவார். எனவே, திருவதிகை பதினொன்று - பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் மிகச் சிறப்புற்றிருந்தது என்பது புலனாகும்.

அன்று என்பது என்ன! பதினெட்டாம் நூற்றாண்டில் கூட, திருவதிகை அரசியல் அரங்கில் இன்றியமையா இடம் பெற்றிருந்தது. ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் தென்னாட்டில் நடந்த போரின்போது திருவதிகைக் கோயில் படாதபாடு பட்டது. இதில் ஆர்க்காட்டு நவாப் முகமது அலி, மராத்தியர்கள் ஆகியோரின் திருவிளையாடல்களும் சேர்ந்துகொண்டன. இந் நான்கு தரத்தார் கைகளிலும் மாறி மாறிப் புக்கது திருவதிகைக் கோயில். அவர்கள் இதனைப் படைகளைத் தங்கவிடும் பாசறைக் கோட்டையாகப் பயன்படுத்தினர். படை மறவர்கள் இங்கே தங்கியிருந்தது கொண்டு சுற்று வட்டாரங்களில் சென்று கொள்ளையடித்துக் கொண்டு வந்ததும் உண்டு. அந்தோ! திலகவதியாரும் திருநாவுக்கரசரும் போற்றிக் காத்த திருவதிகைக் கோயில் இப்படியா தூய்மையிழக்க வேண்டும்?

ஆர்க்காடு நவாப் முகமது அலி 1748 முதுல் 1795வரை தமிழகத்தின் வடபகுதியை ஆண்டார். அவர் பால் இருந்த திருவதிகையை 1750இல் டுப்ளே என்னும் பிரெஞ்சுக்காரர் தாக்கிக் கோட்டைக்கோயிலை எளிதில் கைப்பற்றிக் கொண்டு, எதிர்த்த அந் நவாப்பை ஆர்க்காட்டுக்கு விரட்டி விட்டார். 1752இல் முகமதுஅலி லாரென்சு என்னும் ஆங்கிலேயரின் துணையுடன் மீண்டும் கோட்டைக் கோயிலைப் பிடித்துக் கொண்டார். 1752இல் தோல்வியுற்ற பிரெஞ்சுக்காரரும் மராத்தியரும் 1753இல் மீண்டும் தாக்கிக் கோயிலைப் பிடித்துக் கொண்டனர். 1760இல் ஆங்கிலேயர்கள் பிடித்துக்கொண்டு 1947வரை நிலைப்படுத்திக்கொண்டனர். இந்தப் போராட்டங்களின் போது சிதைந்துபோன கோயில் கோபுரம் பத்தொன்பதாம்