பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

331


நூற்றாண்டின் இறுதியில் பழுதுபார்க்கப்பட்டது. கோயில்கள் சுற்றிப் பெரிய உயரிய மதில்களுடன் அகன்று விரிந்திருப்பதால், எளிதில் போர்க் கோட்டைகளாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இது மிக மிகக் கொடுமை! கோயில்கள் கட்டியதின் நோக்கத்திற்கே எதிர்மாறான தீச் செயலாகும் இது.

அன்று மாநகராய்த் திகழ்ந்த திருவதிகை அத் தகுதியை இன்று அண்மையிலுள்ள பண்ணுருட்டிக்கு அளித்துவிட்டு, தான் ஒரு சிற்றுாராய் அமைதி பெற்றுள்ளது. அன்று திருவதிகை மாநகருள் பண்ணுருட்டியும் அடங்கியிருந்திருக்கும்.

வேகாக் கொல்லை

இவ்வூர் திருவதிகைக்குத் தெற்கே - கெடிலத்தின் தென்கரைக்குப் பத்து கி.மீ. தொலைவில் உள்ளது. வேகாக் கொல்லை தனக்கு வடக்கே 11 கி.மீ. தொலைவிலுள்ள திருவதிகையோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. சிவபெருமான் முப்புர அரக்கர்களைப் புன்னகையால் எரித்த திருவதிகைப் பகுதியில் உள்ள மண் எரியுண்டு வெந்த மண்ணாம்; அதனால் அம் மண் சிவப்பான செம்மண்ணா யிருக்கிறதாம் - செம்மண்ணாயிருப்பது உண்மைதான். திருவதிகைப் பகுதிதான் எரியுண்டு வெந்ததே தவிர, வேகாக் கொல்லைப் பகுதி எரியுண்ணவோ - வேகவோ இல்லையாதலின் இங்குள்ள மண் வெள்ளை மண்ணாயிருக்கிறதாம். வெண் மண்ணாயிருப்பதும் உண்மைதான். இந்த ஊரில் மண்ணெடுத்துச் சூளைபோட்டால் பாதிக் கல்லே வேகும் - பாதி வேகாது. இந்த இயற்கை அமைப்பு, சிவன் முப்புரம் எரித்த புராணக் கதையோடு முடிச்சு போடப் பட்டுள்ளது. சூளைக்கு வேகாத மண் உள்ள பகுதி வேகாக்கொல்லைதானே!

இங்கே சிவன்கோயில் உள்ளது. திருவதிகையில் முப்புர அரக்கர்களை எரித்த இறைவன் இங்கே வந்து களைப்பாறினாராம். களைப்பாறிய இடம் ‘களைப்பாறிய குழி’ என அழைக்கப்பட்டது. இது களப்பாக் குழி என இப்போது கொச்சையாக மருவி வழங்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியுள்ள சிவன் பெயர் களப்பானிசன், இப்பெயர், களைப்பாறிய ஈசன் என்னும் பெயரின் மரூஉ எனச் சொல்லப்படுகிறது. உண்மை யாதோ? சுற்றிலும் மலைப் பாங்காயுள்ள வேகாக் கொல்லை பார்க்க வேண்டிய பகுதியே! இங்கே பலாப்பழம் மிகுதியாய்க் கிடைக்கும். ஊர் மக்கள் தொகை: 1560.