பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

கெடிலக்கரை நாகரிகம்



வேங்கடம் பேட்டை

இவ்வூர் பாலூர் - குறிஞ்சிப்பாடி மாவட்டக் குறும் பாதையில் கெடிலத்தின் தென்கரைக்குப் பத்து கி.மீ. தொலைவில் உள்ளது. பாலூருக்குத் தெற்கே 11 கி.மீ. தொலைவிலும் - குறிஞ்சிப் பாடிக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவிலுமாக இவ்வூர் அமைந்திருக்கிறது. மக்கள் தொகை 2,700. இவ்வூரில் ஒரு பழைய பெருமாள்கோயில் இருக்கிறது; இது, பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது, தமிழகத்தில் ஒரு சிறந்த கோயிலாக மதிக்கப்படுகிறது. பெருமாள் பெயர் வேணுகோபாலசாமி, வைகாசி விசாக நாளில் இங்கே விழா நடைபெறும்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் புதுச்சேரியில் டுப்ளேயின் மொழிபெயர்ப்பாளராயும் சிறப்பு அலுவலாளராயும் இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை வேங்கடம் பேட்டையோடு மிக்க தொடர்பு கொண்டிருந்தார். இவ்வூர் வேணுகோபாலசாமி கோயிலோடு அவர் மிக்க ஈடுபாடு கொண்டிருந்ததன்றி, தனியாகக் கண்ணன் கோயில் ஒன்றும் கட்டினார். ஆனந்தரங்கப் பிள்ளை இருக்கட்டும்; இராமரே தென்னாடு வந்தபோது இவ்வூரில் பள்ளிகொண்டதாகச் சொல்லப்படுகிறது.

வேங்கடம் பேட்டை, வேணுகோபால சாமி கோயிலால் சிறப்புற்றிருப்பதல்லாமல், தன்னிடமுள்ள இரண்டு அழகிய மண்டபங்களாலும் பெரும் புகழ் பெற்றுள்ளது. அவற்றுள் ஒரு மண்டபம் கோயிலின் வெளி முற்றத்திலுள்ளது. இது 50அடி சதுரப் பரப்புள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்கள் சிற்ப வேலைப்பாடு மிக்கவை. இம் மண்டபம் முடிவு பெறாத நிலையில் விடப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில், அரங்கநாதர் ஆதிசேடன்மேல் பள்ளி கொண்டிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் காணத்தக்கது.

இரண்டாவது மண்டபம் வேணுகோபால சாமி கோயிலின் எதிரே - கோயிலைப் பார்த்தாற்போல் உள்ளது. இது மிகமிக அழகிய மண்டபமாகும். 60 அடி சதுர வடிவில் உள்ள இம்மண்டபத்தின் இரு பக்கங்களிலும் நுழைவாயில் உண்டு. ஏழடி உயரம் கட்டப்பட்டுள்ள ஒரு மேடையின்மேல் இம்மண்டபம் மிடுக்கான தோற்றத்துடன் நிற்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு தூண்கள் வீதம் நான்கு பக்கங்களிலுமாக மொத்தம் பதினாறு தூண்கள் இதன் மேல் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு