பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

கெடிலக்கரை நாகரிகம்


வியப்பிற்குரிய பொருளாயுள்ளது. இந்தக் கல், கோயிலுக்கும் மண்டபத்திற்கும் இடையே உள்ளது. இதன் சுற்றளவு : 3 மீட்டர் உயரம் : 18 மீட்டர். இக் கருங்கல்லில் அமைந்திருக்கும் வியப்பு யாதெனில், இதன் அடிப் பகுதி சதுரமாயும் மேல் பகுதி எட்டுப் பட்டைகள் கொண்டதாயும் இருப்பதுதான்! இவ்வாறு காணவேண்டிய காட்சிகள் நம் நாட்டில் எத்தனையோ இருந்தும் காண்பவர் எத்தனை பேர்?

சென்னப்பநாயக்கன் பாளையம்

இவ்வூர் கடலூருக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் உள்ளது. இவ்வூருக்குச் செல்ல வேண்டுமெனில், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையில் - கடலூருக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலுள்ள பாலூரில் இறங்கவேண்டும்; பின்னர், பாலூரிலிருந்து குறிஞ்சிப் பாடிக்குச் செல்லும் மாவட்டக் குறும்பாதை வழியே செல்ல வேண்டும், பாலூருக்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. இங்கே ஆற்றில் 1965இல் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் வாயிலாக ஆற்றைக் கடந்து தென்கரைக்கு ஒரு கி.மீ. தொலைவு சென்றால் ஊரை அடையலாம். கிழக்கேயுள்ள கடலூரிலிருந்தும் தெற்கேயுள்ள குறிஞ்சிப் பாடியிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துவண்டி வசதி உண்டு. ஆற்றில் பாலம் கட்டுவதற்குமுன், கடலூர் திருக்கோவலூர் சாலையில் பேருந்து வண்டியில் வருபவர்கள் பாலூரிலே இறங்கி நடந்து வரவேண்டும். வெள்ளக் காலத்தில் மக்கள் பெரிதும் தொல்லைப்பட்டனர். பாலம் கட்டாதபோதும், குறிஞ்சிப் பாடியிலிருந்து இவ்வூருக்குப் பேருந்து வண்டியில் வந்து செல்ல வசதி இருந்தது.

இவ்வூர் கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்தது. மக்கள் தொகை: 7,500. காவல் (போலீசு) நிலையம், மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளி முதலிய வசதிகள் அண்மையில் சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளன. இவ்வூர் பாளையம், நடுவீரப்பட்டு என்னும் இரு பெரும் பிரிவாக உள்ளது. மேலண்டைப் பகுதியாகிய பாளையத்தையும் கீழண்டைப் பகுதியாகிய நடுவீரப்பட்டையும் நடுவே ஒடும் ஒரு வாய்க்கால் பிரிக்கிறது. இவ்வூர் இப்போது செ. பாளையம் எனவும், பாளையம் எனவும் சுருக்கமாகவும் அழைக்கப்படுகிறது.

நாயக்க மன்னர் காலத்தில் சென்னப்பநாயக்கன் பாளையம் 8 பேட்டை 16 குப்பங்கள் அடங்கிய ஒரு பாளையப்பட்டாக (மிட்டாவாக), சென்னப்ப நாயக்கர் என்பவருக்கு உரியதாக