பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

கெடிலக்கரை நாகரிகம்


வேண்டியவர் என்பதாகவும், என் பாட்டனார் வீட்டிற்கு வள்ளலார் பல முறை வந்துள்ளார் என்பதாகவும் என் தாயார் பலமுறை என்னிடம் தெரிவித்துள்ளார்கள்) பாளையத்திற்குத் தெற்கே 16கி.மீ. (10 மைல்) தொலைவில் தான் வடலூர் இருக்கிறது.

கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த சென்னப்ப நாயக்கன் பாளையத்து மக்கள் கிழக்கேயுள்ள கடலூருக்குப் பல வேலைகளை முன்னிட்டு அடிக்கடி வருவர். அவர்கள், கடலூருக்குப் போவதாகச் சொல்லமாட்டார்கள்; ‘கிழக்கே போகிறேன்’, ‘கிழக்கேபோய் வருகிறேன்’, ‘கிழக்கே போயிருக்கிறார்’ என்றெல்லாம் கூறிக் கடலூரைக் ‘கிழக்கு’ என்னும் சொல்லாலேயே குறிப்பிடுவார்கள். இஃது தமிழிலக்கணத்தில் ‘ஆகுபெயர்’ எனப்படும்.

இவ்வூர், சென்னப்ப நாயக்கன் பாளையத்திற்குக் கிழக்கே 2 கி.மீ. தெலைவில் கெடிலத்தின் தென்கரையில் இருக்கிறது. இப் பகுதியில் கெடிலத்தின் தென்கரையைத் தொடர்ந்து கேப்பர் மலைத்தொடர்ச்சியைக் காணலாம். இத்தொடர்ச்சியில் விலங்கல்பட்டு என்னும் ஊருக்கு அருகில் உள்ள ஒரு மலைமேல் ஒரு துறவியின் மடமும் முருகன்கோயிலும் உள்ளன. இக்கோயிலில் பங்குனி உத்தர விழா சிறப்பாக நடைபெறும். இக்கோயில் உள்ள மலை ‘விலங்கல் பட்டு மலை’ என்றழைக்கப்படும்.

வானமாதேவி

இவ்வூர், விலங்கல்பட்டுக்கு கிழக்கே 2கி.மீ. தொலைவிலும் - கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலத்தின் தென்கரைக்கு 2.கி. மீட்டரில் இருக்கிறது. இந்தப் பகுதியில் கெடிலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வானமாதேவி அணை எனப்படும். அணைக்கு அருகிலேயே அருங்குணம், பல்லவராய நத்தம் ஆகிய ஊர்கள் இருக்கவும் 3 கி.மீ. தொலைவு எட்டியுள்ள வாணமா தேவியின் பெயரால் அணை அழைக்கப்படுவதிலிருந்து, இவ்வூரின் பழைய பெருமை புலப்படும். வாண மாதேவி என்னும் பெயர், சோழ மாதேவி, சேர மாதேவி, பாண்டி மாதேவி என்பனபோல் ஒர் அரசியின் பெயராகத் தெரிகிறது. பாணர் அல்லது வாணர் என்னும் மரபைச் சேர்ந்த அரசியை இப் பெயர் குறிக்கலாம். அவ்வரசியின் பேரால் இவ்வூர் அழைக்கப்பட்டு வரலாம். இப் பகுதியைப் பல்வேறு காலங்களில் பல்வேறு சிற்றரச மரபினர் ஆண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.