பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

339



இவ்வூர்க் கோயிலில் மூலத்தானம் எனப்படும் கருவறை, எப்போதும் திரையிடப் பட்டேயிருக்கும்; அதனால் மூலவராகிய இலிங்கத்தைக் காணமுடியாது. திரையில், ஒருவகைத் தெய்வ இனத்தவர் என்று சொல்லப்படும் உருத்திரர்கள் பதினொருவருள் ஒருவராகிய பீம ருத்திரர் என்பவரின் உருவம் தீட்டப்பட்டிருக்கும். இவர் உள்ளேயிருக்கும் இறைவனுக்குக் காவலாக இருப்பதாகக் கதை. திரையில் இருக்கும் இந்தப் பீமருத்திரர்க்கே முதலில் எல்லாவகையான பூசனைகளும் நடத்தப்பெறும்; பின்னரே திரை விலக்கிச் சிவலிங்கத்திற்குப் பூசனை நடத்தப்பெறும். இந்த நேரத்தில் மட்டுந்தான் இலிங்கத்தைக் காணமுடியும். இது மற்ற ஊர்களில் இல்லாத ஒரு தனி முறையாகும். இவ்வூர் இறைவன் மாசி மகத்தன்று கடலூர்க் கடற்கரைக்குச் சென்று நீராடி வண்டிப் பாளையத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் தங்கி ‘மண்டபபடி விழா நடத்திக்கொண்டு விடிவதற்குள் ஊர் திரும்பிவிடுவார். வண்டிப் பாளையத்தார்க்கு இஃது ஒரு பெருவிழாவாகும்.

திருமாணி குழியில் சோழர், பாண்டியர், இராட்டிரகூடர் முதலியோர் காலத்துக் கல்வெட்டுகள் பல உள்ளன. இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி 1136 - 1150) இவ்வூரில் முடி சூட்டிக்கொண்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. சோழன் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய தலை நகரங்களை விட்டுவிட்டு இங்கே வந்து முடி சூட்டிக் கொண்டது ஏன்? இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பகைவர் எவரும் சோழ நாட்டின்மேல் படையெடுக்கவில்லை. பரந்து விரிந்து கிடந்த சோழப் பேரரசில் அன்று அமைதி நிலவியது. ஆயினும், சோழப் பேரரசால் ஆங்காங்கே அமர்த்தப் பட்டிருந்த ஆட்சிப் பேராளர்கள் (பிரதிநிதிகள்) சிலர், தமது மேற்பார்வையில் இருந்த பகுதிகளைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இந்த நிலையில், திருமாணி குழிப்பகுதிக்குப் பொறுப்பேற்றிருந்த ஆளுநரும் (கவர்னரும்) சோழப் பேரரசுக்கு அடங்காது அப் பகுதியைத் தமதாக்கிக் கொண்டிருக்கலாம். செய்தியறிந்த குலோத்துங்கன் ஆங்குச் சென்று அவரையடக்கி, அப் பகுதிக்குத் தானே தலைவன் என்பதை உறுதிப் படுத்தும் முறையில் திருமாணி குழியில் முடி சூட்டிக்கொண்டிருக்கலாம்.

இந்த முடிசூட்டைப் பற்றி வேறு விதமாகவும் கருத்து கூறக்கூடும்: மக்கள் சிலர் திருக்கோயில் சிறப்புள்ள திருப்பதிகள் சிலவற்றில் சென்று திருமணம் செய்து கொள்வதுபோல, தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடைய