பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

கெடிலக்கரை நாகரிகம்


திருமாணி குழியில் சென்று இரண்டாங் குலோத்துங்க சோழன் முதல் முதலாக முடிசூட்டிக் கொண்டிருக்கலாம். எதற்கும் திட்டவட்டமான காரணம் கூறமுடியாது. இந்த இரண்டாங் காரணத்தைவிட முதலில் சொன்ன காரணமே பொருத்த மானதாய்த் தோன்றுகிறது.

சோழன் தனக்கு அடங்காதவரை அடக்கித் திருமாணி குழியில் முடி சூட்டிக்கொண்டான் என்ற அடிப்படையைக் கொண்டு ஆராயுங்கால், அன்று திருமாணி குழி சுற்றுப்புற வட்டாரத்திற்குத் தலைநகரா யிருந்திருக்கிறது என்பது புலப்படும். அன்று திருமாணி குழி அரசியல் அரங்கில் இன்றியமையாத ஒரு மையமாகப் (கேந்திரமாகப்) பயன்படுத்தப்பட்டதற்குக் காரணம், அதைச் சுற்றியுள்ள இயற்கையரண்களேயாகும். எந்தப் பக்கத்திலிருந்து பகைவர் வருவதாயிருப்பினும், கெடிலம் ஆற்றையோ அல்லது கேப்பர் மலையையோ கடந்து வந்தால்தான் திருமாணி குழியை அடையமுடியும். திருமாணி குழியின் வடபுறம் உள்ள கெடிலம் ஆறும் தென்புறம் உள்ள கேப்பர் மலைத் தொடர்ச்சியும் திருமாணி குழிக்குக் கிழக்கே சிறிது தொலைவில் பக்கத்தில் - பக்கத்தில் நெருங்கியுள்ளன. இப்படியாக, நீர் அரணும், மலை அரணும், மிக்க உணவுப் பொருள் விளைக்கும் நிலவளமும் ஒருசேரப்பெற்றுத் திகழும் திருமாணிகுழி அரசியல் மையம் பெற்றிருந்ததில் வியப்பில்லை.

பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர் மரபின் தலைவரான வளந்தானார் என்பவர் சோழரது மேலாட்சியின் கீழ் ஒரு தலைவராய்ப் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருமாணிகுழிப் பகுதியை அரசாண்டார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு 13 ஆம் நூற்றாண்டில் அரசோச்சிய கோப்பெருஞ்சிங்கன் இந்த வளந்தானாரது மரபுவழி வந்தவனே. முதற் குலோத்துங்கன் கி.பி. 1070 தொடங்கி 1120 வரையும், அவர் மகன் விக்கிரம சோழன் 1120 தொட்டு 1135 வரையும் செங்கோல் செலுத்தினர். இவ்விருவருள் ஒருவரது காலத்திலோ அல்லது இருவர் காலத்திலுமோ வளந்தானார் திருமாணிகுழிப் பகுதியை ஆண்டிருக்கலாம். அவருக்குப்பின் அவர் வழியினரான மோகன் ஆட்கொல்லி, அரச நாராயணன், கச்சிராயன், வீரசேகரன், சீயன் என்பவர்கள் பரவலாகப் பலவிடங்களில் பொறுப் பேற்றிருந்தனர்.

இவர்களுள் மோகன் ஆட்கொல்லி என்பவன் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் அவனது மேலாட்சியின் கீழ்த்