பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

கெடிலக்கரை நாகரிகம்


எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவில் மண்டலம் என்பது, சோழ மண்டலத்திற்கும் தொண்டை மண்டலத்திற்கும் நடுவில் இருப்பது அஃதாவது, ‘நடுநாடு’ என்னும் பொருளைக் குறிப்பதாயிருக்கலாம்.

ஓட்டேரி

கடலூருக்கு மேற்கே 9 கி.மீ. தொலைவிலும் திருமாணிகுழிக்குக் கிழக்கே ஒரு கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலத்தின் தென்கரையில் ஓட்டேரி என்னும் சிற்றுார் இருக்கிறது. இங்கே ஆற்றின் தென்கரையை ஒட்டி ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. இந்தப் பிள்ளையாருக்கு ‘ஓட்டேரிப் பிள்ளையார்’ என்பது பெயர். இவருக்குத் திறந்தவெளி அரங்கில்தான் விருப்பம் மிகுதி. கோயிலுக்கு உள்ளே இவர் இருக்க மாட்டேன் என்கிறார்; கோயிலின் வடக்கு மதிலையொட்டியுள்ள ஒரு திறந்தவெளி மேடையில் நிலையாக அமர்ந்துவிட்டார். கோயில் இறையுருவம் இன்றி வறிதே கிடக்கிறதே என்று கருதி மக்கள் பலமுறை இவரை உள்ளே கொண்டுபோய் வைத்தார்களாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இவர் வெளி மேடைக்கே வந்துவிட்டாராம். இப்படிப் பலமுறை முயன்று பார்த்த பின்னர் யாரும் இவர் வம்புக்குப் போகாமல், வெளிமேடையிலே இருந்து போகட்டும் என்று விட்டுவிட்டார்களாம். இவருக்கு நாடோறும் பூசனை உண்டு. ஆனால், காயும் வெயில், பெய்யும் பனி மழை, அடிக்கும் புயல் எல்லாம் இவர் தலைமேல்தான். என்ன செய்வது!

ஏதோ பித்தம் பிடித்தவர்போல் வெளியே உட்கார்ந்து கொண்டு கிடக்கிறாரே என்று இவரை எளிதாக எண்ணிவிடக் கூடாது. சுற்றுப்புற வட்டாரத்து மக்களிடையே இவருக்குப் பெரிய செல்வாக்குண்டு. இங்கே கெடிலத்தின் தென்கரையாக இப் பிள்ளையார் கோயிலும், வடகரையாகக் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையும் உள்ளன. அப்பாதை வழியே நடந்து ஊர்ப் பயணம் செய்பவர்கள் பலர் ஆற்றைக் கடந்து பிள்ளையாரை அடைந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். வெய்யில், வெள்ளம், இயலாமை, சோம்பல் முதலிய காரணங்களால் ஆற்றைக் கடக்க முடியாதவர்கள் சிலர் ஆற்றின் வடகரையில் நின்றபடியே, தென்கரையில் இருக்கும் பிள்ளையாரை நோக்கித் தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்திக் கும்பிடு போட்டுச் செல்வர். இப் பிள்ளையாருக்கு இருக்கும் செல்வாக்கு இப்போது புரியுமே!