பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

கெடிலக்கரை நாகரிகம்


வடகரையில் உள்ளது. இவ்வூருடன் இணைந்தாற்போல் தென்பகுதியில் குணமங்கலம் என்னும் ஊர் உள்ளது. இப்பகுதியில் நெசவுத் தொழில் மிகுதி. இங்கே திங்கட்கிழமை தோறும் சந்தை கூடும். இப் பகுதிக்கும் நெல்லிக்குப்பத்திற்கும் இடையே ‘பூலோக நாதர் கோயில்’ என்னும் பழைமையான சிவன் கோயில் ஒன்றும் அதே பெயரில் சிற்றூர் ஒன்றும் உள்ளன.

காராமணிக் குப்பத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி ஒரு தோப்பு இருக்கிறது; அதில் ஓர் அழகிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது; அதையொட்டி ஒரு தாமரைத் தடாகம் இருக்கிறது. திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலிலிருந்து பாடலே சுரர் ஆனிப் பருவந்தோறும் இம் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். இறையுருவம் கெடிலம் ஆற்றிற்குச் சென்று நீராடும் விழா நடைபெறும். இந்த விழாவிற்குத் ‘தோப்புத் திருவிழா’ என்பது பெயர். இந்தப் பகுதி கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்ததாகும்.

பாகூர்

பாகூர் கெடிலத்திற்கு நேர் வடக்கே 4 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றுக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவிலுமாகப் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டத்தின் தெற்கு எல்லை பாகூர்ப் பகுதிதான், புதுச்சேரி நகரிலிருந்து தெற்கே 18 கி.மீ. தொலைவிலுள்ள பாகூர் வரையும் புதுச்சேரி மாநிலப் பகுதி தொடர்ந்து ஒரு சேர அமைந்திருக்கவில்லை; நடுநடுவே தமிழகத் தென்னார்க்காடு மாவட்டத்தின் பகுதிகளும் உள்ளன. இவ்வாறு சொல்வதைவிட, தென்னார்க்காடு மாவட்டத்தில் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய வட்டங்களின் இடையிடையே விட்டு விட்டுப் புதுச்சேரி மாநிலத் திட்டுப் பகுதிகள் உள்ளன என்று சொல்லலாம்.

புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் எட்டு வட்டங்கள் உள்ளன; அவற்றுள், பாகூர் வட்டம் ஒன்றாகும். வட்டம் என்பது பிரெஞ்சு மொழியில் ‘கொம்மின்’ (Commune) எனப்படும். புதுச்சேரி மக்கள் ‘பாகூர் கொம்மின்’ என்றே சொல்லுவார்கள். இங்கே ஒவ்வொரு கொம்மினும் ஒரு நகராட்சி (முனிசிபாலிடி) போல ஆளப்படுகிறது, இந்த முறையில் பாகூர்ப் பகுதி ஒரு நகராட்சியாகவே நடத்தப்படுகிறது. தென்னார்க்காடு மாவட்டத்தில் கெடிலம் நடுவே ஓடும் கடலூர் ஒரு பெரிய நகராட்சியாகும். கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையும் பாகூர் நகராட்சியின் தெற்கு