பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

347


எல்லையும் ஒன்றோடொன்று முட்டிக் கொள்கின்றன. இதிலிருந்து, கெடிலக்கரைக் கடலூருக்கும் பாகூருக்கும் உள்ள நெருக்கத்தை அறியலாம். பாகூர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்ததாயினும் அதற்கு அண்மையிலுள்ள பெரு நகரம் கடலூர்தான். எனவே, பாகூர்ப் பகுதி மக்கள் நகர்ப்புறத் தேவைகளைக் கடலூருக்கு வந்தே முடித்துக் கொள்கின்றனர்.

பாகூர் பெண்ணையாற்றங்கரைக்கு அண்மையில் இருப்பினும் கெடிலக்கரைக்கும் உரியதேயாம். எங்கேயோ தோன்றி ஓடிவரும் பெண்ணையாறு கடலூரை நெருங்க நெருங்கக் கெடிலத்திற்கு மிக அண்மையில் வந்து விடுகிறது. எனவே, பெண்ணையாற்றங்கரை நாகரிகமெல்லாம் கெடிலக்கரை நாகரிகமுமாகும். இந் நிலையில் இந்நூலில் இடம் பெறுவதற்குப் பாகூருக்கு முழு உரிமையும் உண்டு.

கடலூர் - புதுச்சேரி மாவட்ட நெடுஞ்சாலையில் கடலூருக்கு வடக்கே 4 ஆவது கி. மீட்டரில் மேற்கு நோக்கி ஒரு பாதை பிரிந்து பாகூருக்குப் போகிறது. அந்தப் பாதையில் 3 கி.மீ. தொலைவு சென்றால் பாகூரை அடையலாம். புதுச்சேரி மாநிலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க இன்றியமையா இடங்களுள் பாகூரும் ஒன்றாகும். ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் இடையே பாகூரிலும் போர் நடக்கத் தவறவில்லை. 1752 இல் லாரென்ஸ் என்னும் ஆங்கிலேயர் பாகூரில் பிரெஞ்சுக்காரர்களைக் கடுமையாகத் தாக்கினார்.

அரசியல் துறையைவிட, கல்வித் துறையிலும் சமயத் துறையிலும் ஒரு காலத்தில் பாகூர் மிகமிகப் புகழ்பெற்றிருந்தது. இவ்வூரில் எட்டாம் நூற்றாண்டில் ஒரு பெரிய வடமொழி பல்கலைக்கழகம் இருந்தது. இது பாகூர் வட்டாரத்து அறிஞர்களாலேயே நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மாணாக்கர்கள் இங்கேயே உண்டு உறைந்து கல்வி கற்றனர். அந்தக் காலத்தில் அரசோச்சிய நிருபதுங்க வர்மப் பல்லவப் பேரரசன் (855 - 896) பாகூர்ப் பல்கலைக்கழகத்திற்கு மூன்று சிற்றூர்களை முற்றூட்டாக அளித்ததாகச் செப்பேடுகளால் அறியப்படுகிறது. அவ்வூர்களாவன: சேத்துப் பாக்கம், விளங்காட்டங் காடவனூர், இறைப்புனச்சேரி ஆகியவை. பாகூரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்ததிலிருந்து, இவ்வூர் அந்தக் காலத்தில் பெற்றிருந்த இன்றியமையாத்தன்மை இனிது புலனாகும்.

பாகூரில் சிவன் கோயில் உள்ளது. இது பல்லவ மன்னர் காலத்தது எனச் சொல்லப்படுகிறது. சிவன் கோயிலில் உள்ள