பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

கெடிலக்கரை நாகரிகம்


நாட்டியச் சிற்பங்கள் மிகவும் காணத்தக்கவை. அவற்றுள் - சிலவற்றின் படங்களை, இந்நூலில் ‘கல்வி - கலைத்துறைகள்’ என்னும் தலைப்பில் காணலாம். கல்வெட்டுகளும் உள்ளன. கோயிலின் பெயர் மூலட்டானம். சிவன் பெயர்: மூலட்டர், மூலட்ட நாதர்.

இந்தக் கோயில், இராட்டிரகூட மன்னன் மூன்றாம் அமோக வர்ஷன் மகனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவன் என்னும் கன்னர தேவனால் திருப்பணி செய்யப் பெற்றதாகும். கன்னர தேவன் கி.பி. 939இல் பட்டம் சூட்டிச் கொண்டான். இவன் சோழர்களோடு பொருது வென்று, அவர்தம் ஆட்சியின் கீழ் இருந்த பல பகுதிகளைச் சிறிது காலம் அரசாண்டான். சோழரைத் தான் வென்றதைக் குறிக்கு முகத்தான், ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன்’ என்னும் வெற்றித் தொடரைத் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துப் பெருமையடித்துக் கொண்டான். முதலாம் பராந்தகன், அவன் மக்கள் இராசாதித்தன், கண்டராதித்தன் முதலியோரிடம் முரணிய கன்னர தேவனது கொட்டத்தை இரண்டாம் பராந்தக சோழன் ஒடுக்கிவிட்டான்.

கன்னர தேவன் தன் ஆட்சிக் காலத்தில் பல ஊர்க் கோயில்களில் திருப்பணி செய்துள்ளான். அவற்றுள், பாகூர்க் கோயிலும் ஒன்று. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில்லாண்டுகள் பாகூர்ப் பகுதி கன்னர தேவனது ஆட்சியின்கீழ் இருந்ததற்குச் சான்று பகரும் முறையில் பாகூர் மூலட்டானத்துக் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று வருமாறு:

(கன்னர தேவன், 8 கி.பி. 962)
“ஸ்வஸ்தி ஸ்ரீ கன்னர தேவர்க்கு யாண்டு இருபத்திரண்டு, வேசாலிப்பாடி வடகரை வாகூர் நாட்டு மன்றாடிகளே, வாகூர் ஸ்ரீ மூலட்டானத்துப் பெருமானுக்கு நாங்கள் வைத்த தன்மம் - கட்டிலேறப் போம்போது ஒரு. ஆடு குடுத்துக் கட்டிலேறுவோமாகவும், புறநாட்டி நின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டிலேறு மன்றாடி வசம் ஒரு ஆடு குடுப்பதாகவும், குடாது திறம்பினோமைக் கணப் பெருமக்களும் தேவரடியாரும் இரண்டு ஆடு பிடித்துக் கொள்ளப் பெறுவதாகவும், ஒட்டிக் குடுத்தோம் இஞ்ஞாட்டு மன்றாடிகளோம். இத்தன்மம் சந்திராதித்தவல் நிற்பதாக நிறுத்திக் குடுப்போமானோம். இஞ்ஞாடு மதகு செய்கின்ற மதகரோம் - ஸ்ரீ.”

இந்தக் கல்வெட்டு, கன்னர தேவன் பட்டம் ஏற்றுக் கொண்ட இருபத்திரண்டாம் ஆண்டில் வெட்டப்பட்டதாகக்