பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

கெடிலக்கரை நாகரிகம்


ஆற்றில் நீராடித் தேர்த் திருவிழாவைக் கண்டுகளிப்பர். இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்களையியற்றிய வேதாந்த தேசிகரின் நினைவாக ஒரு மண்டபம் உள்ளது. அம் மண்டபத்திற்கு விழா நாளில் இறையுருவம் கொண்டு செல்லப்படும். இது தேசிகரின் சிறப்பிற்குச் சான்று. தேசிகருக்குக் கருடாழ்வார் அருளுரை வழங்கிய விழா புரட்டாசித் திருவோணத்தில் நடைபெறும். கார்த்திகைத் திங்களில் ‘தாலாட்டு விழா’ என்னும் ஒருவகை விழா இனிது நடைபெறும். மாசி மகத்தன்று தேவநாதப் பெருமாள் கடலூர்க் கடற்கரைக்கு எழுந்தருளி நீராடுவார்; அன்றிரவு வண்டிப் பாளையத்திலுள்ள மண்டபத்தில் தங்கி விழா வயர்ந்து செல்வார்.

மக்கள் பலர் திருவயிந்திரபுரம் வந்து முடியெடுத்துக் கொள்வர். குடும்பப் பழக்கமாகக் குழந்தைகட்கு முடியெடுப்பதல்லாமல், நேர்ந்து வேண்டிக்கொண்ட பெரியவர்களும் வந்து முடியெடுத்துக் கொள்வதுண்டு. திருவயிந்திரபுரம் தெற்குத் திருப்பதி எனப் புராணங்களாலும் மக்களாலும் போற்றப்படும் பெருமையுடையதாதலால், திருப்பதிக்குப் போக முடியாதவர்கள் அங்கே செலுத்துவதாய் நேர்ந்துகொண்ட கடனை இங்கே வந்து செலுத்துவதும் உண்டு. திருப்பதி வேங்கடத்தான் கோயில் முன் காலத்தில் முருகன் கோயிலாய் இருந்தது என்று சிலர் சொல்வதுபோல், திருவயிந்திரபுரம் கோயிலும் முன்காலத்தில் சைவக் கோயிலா யிருந்தது எனச் சிலர் சொல்வதுண்டு; அவர்கள் தம் கூற்றுக்குச் சான்றாக, இக்கோயிலுக்குள் விநாயகர் உருவமும் சிவனது தட்சணாமூர்த்தி உருவமும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். சிலர் ஊர்ச் சிவன் கோயில்களுக்குள்ளே கூடத்தான் திருமால் கோயில் இருக்கிறது. சிதம்பரத்தில் இரண்டும் அருகருகே இல்லையா? எனவே, இதுசார்பாக எதையும் திட்டவட்டமாகக் கூறமுடியாது. பழமுதிர்சோலை என்னும் கள்ளழகர் கோயில் பற்றியும் இதுபோன்ற கருத்து வேறுபாடு காணப்படுவது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

நீராடு செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்ட அர்ச்சுனன் திருவயிந்திரபுத்திற்கும் வந்து நீராடி வழிபாடு நடத்தினானாம். இதனை வில்லிபாரதம் - ஆதிபருவம் அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திலுள்ள,

"மெய்யாகம வதிகைத்திரு வீரட்டமு நேமிக்
கையாளான் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான்.”