பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

கெடிலக்கரை நாகரிகம்


ஒடுகிறது. கடலூர் நகருக்கு நடுவே ஒடுகிறது; கடலூர் நகருக்கு அருகில் (கடலூர்க்) கடலில் கலக்கிறது. கடலூர் நகர எல்லைக்குள் கெடிலத்தின் கரையிலே பாடல் பெற்ற பதி, புகைவண்டி சந்திப்பு நிலையம், உயர்நிலைப் பள்ளிகள். தொழிற் பள்ளிகள், கலைக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவ நிலையம், திரைப்பட மாளிகைகள், தலைநகர்த் தலைமை அலுவலகங்கள், பெரிய உணவு விடுதிகள், பெருவெளித் திடல் (மைதானம்), தொழிற்கூடங்கள், வணிக நிலையங்கள், பெரிய கடைத் தெரு, தலைநகர்க் கோட்டை, துறைமுகம் முதலியவை அமைந்துள்ளன. இவையனைத்தும் தன் கரைக்கு அருகில் அகப்படும் அளவில் கெடிலம் ஆறு கடலூர் நகர எல்லைக்குள் பல வளைவும் பிரிவும் பெற்றுச் செல்கிறது.

நகராட்சி

கடலூர் முதல் தரமான நகராண்மைக் கழகம் (முனிசிபாலிடி) உள்ள பெருநகர். இந் நகராண்மைக் கழகம் 1866 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது; 1954ஆம் ஆண்டு முதல் தர நகராண்மைக் கழகம் என்னும் தகுதி பெற்றது. இதன் நூற்றாண்டு விழா 1967 சனவரி முதல் வாரத்தில் மிகச் சிறப்புடன் கொண்டாடப் பெற்றது; விழாவின் நினைவாக ஒரு சிறப்பு மலரும் வெளியிடப் பெற்றுள்ளது.

கடலூர் நகராட்சிப் பகுதியின் பரப்பளவு 30 சதுர கி.மீ.; மக்கள் தொகை 80,000. இந் நகராட்சியில் 32 உட்பிரிவுத் தொகுதிகள் (Wards) உள்ளன. திருப்பாதிரிப் புலியூர், மஞ்சக் குப்பம், புதுப்பாளையம், கூடலூர் என்னும் நகரப் பகுதிகளும், முட்டு குடிசை, கம்மியன் (கம்மிங்ஸ்) பேட்டை, கிஞ்சன் பேட்டை, சூரப்ப நாய்க்கன் சாவடி, வண்டிப் பாளையம், நத்தைவெளி, வடுகு பாளையம், புருகேஸ் (புரூக்ஸ்) பேட்டை, மஞ்சினி நாய்க்கன் குப்பம், வசந்தராயன் பாளையம், செல்லன் குப்பம், சிவானந்தபுரம், பணிக்கன் குப்பம், மாலுமியார் பேட்டை, குட்டகரை, ஏணிக்காரன் தோட்டம், அக்கரைகோரி சிங்காரத் தோப்பு - சோணங்குப்பம், சான்றோர் பாளையம், வன்னியர் பாளையம், தேவனாம் பட்டினம், கருமார்பேட்டை, லாதம்ஸ்பேட்டை, சொரக்கல்பட்டு, வேணுகோபாலபுரம், வில்வராய நத்தம் முதலிய நகர்ப்புறப் பகுதிகளும் சேர்ந்தது கடலூர் நகராட்சி.

தமிழகத்தில் கடலூருக்கெனத் தனிப் பெரும் பெருமைகள் சில உள; அவையாவன: