பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

361


1. தமிழகத்தின் முதல் தலைநகர்

இப்பொழுது தமிழகத்தின் தலைநகராயிருப்பது சென்னை. ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகத்தின் தலைநகராயிருந்தது சென்னை அன்று கடலூர்தான்! கடலூரில் கெடிலம் கடலோடு கலக்கும் இடத்திற்கு அருகிலுள்ள “செயின்ட் டேவிட் கோட்டை'யை (St. David Fort) மையமாகக் கொண்டே அன்று ஆங்கிலேயர் தமிழகத்தில் ஆட்சி தொடங்கினர். இந்தக் கோட்டையைப் பிரெஞ்சுக்காரர்கள் பலமுறை தாக்கி அழித்ததால் தமிழகத்தின் தலைநகராய்த் தொடர்ந்து விளங்கும் தகுதியைக் கடலூர் இழந்து விட்டது. கடலூர்க் கோட்டைக்குப் பிரெஞ்சுக்காரரால் ஊறு நேராதிருக்குமாயின், கடலூர் நகரம் கல்கத்தா நகரம் போல் மிகப் பெரிய நகரமாக விரிவு பெற்றிருக்கும்; சென்னை எடுத்துக் கொண்ட தலைநகர்த் தகுதி கடலூர்க்கே தொடர்ந்து இருந்திருக்கும். தமிழகத்தின் வடக்குக் கோடியிலுள்ள சென்னையினும், தமிழகத்தின் நடுவேயுள்ள கடலூர் தலைநகராயிருப்பது நாடு முழுவதற்கும் வசதியல்லவா? அன்று கடலூர் தலைநகர்த் தகுதியைப் பெற்றிருந்ததற்குக் காரணமாயிருந்தது கெடிலம் ஆற்றுச் சூழ்நிலையே. கெடிலம் கடலோடு கலக்கும் இடத்தில் ஆற்றில் துறைமுகம் அமைந்திருந்ததால், வாணிகத்தின் பெயரில் கப்பல் ஒட்டிக் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் அங்கே கப்பலை நிறுத்தி இறங்கி வந்து ஆணியடித்துக் கொண்டு அமர்ந்து விட்டனர்.

2. மூன்று கழிமுகங்கள்

கடலூரின் வடக்கு எல்லையில் தென்பெண்ணையாறும், தெற்கு எல்லையில் பரவனாறும், நடுவே கெடிலம் ஆறும் கடலில் கலக்கின்றன. இது, எந்த நகரிலும் இல்லாத ஒர் அமைப்பு. ஒரு நகராட்சி எல்லைக்குள் மூன்று ஆறுகள் ஒடி வந்து கடலில் கலப்பது ஒரு தனியமைப்பே. இது, துறைமுகமும் கோட்டையும் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலையைத் தந்தது.

3. சிறிய பெரிய துறைமுகம்

இந்தியாவின் கிழக்குக் கரையில் கல்கத்தா (வங்காளம்), பாராதிப் (ஒரிசா), விசாகப்பட்டணம் (ஆந்திரம்), சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்கள் பெரியவை; இப் பெரிய துறைமுகங்களுக்குள் சிறியது தூத்துக்குடி, இவை போக, பல சிறிய துறைமுகங்களும் உள்ளன. கிழக்குக் கடற்கரையிலுள்ள சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறைமுகம் கடலூர்த் துறைமுகந்தான். சென்னை,