பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

கெடிலக்கரை நாகரிகம்


வண்டிகள் செல்கின்றன. கடலூரிலிருந்து புதுச்சேரிக்குக் கால்மணி - அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து வண்டி செல்கிறது.

இவ்வசதிகளேயன்றி, ஒரு மாவட்டத்தின் தலைநகரில் இருக்க வேண்டிய அரசு அலுவலகங்கள் - நிலையங்கள் அத்தனையும் கடலூரில் அமைந்துள்ளன. கடலூர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகர் என்பது நினைவு கூரத்தக்கது.

வரலாறு

பொதுவாகத் தமிழகத்தின் - சிறப்பாகத் தென்னார்க்காடு மாவட்டத்தின் வரலாற்றில் கடலூருக்குப் பெரும்பங்கு உண்டு. தமிழ்நாடு, தமிழருக்கு அல்ல - ஆங்கிலேயர்க்கா அல்லது பிரெஞ்சுக்காரர்க்கா என்பதைத் தீர்மானிக்கும் போராட்டம், பதினெட்டாம் நூற்றாண்டில் பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தை - சிறப்பாகக் கடலூரை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் இடையே நடைபெற்றது. இவ்விரு தரத்தாருக்கிடையே கடலூர்ப் பகுதிகளும் புதுச்சேரிப் பகுதிகளும் பலமுறை கைம்மாறின. இன்றும் கடலூர் வட்டத்தின் இடையிடையே புதுச்சேரி மாநிலத் திட்டுப் பகுதிகள் சிற்சில இருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. 1746 தொட்டு 1749 வரை சென்னை பிரெஞ்சுக்காரர் கையில் இருந்தது; அப்போது ஆங்கிலேயர்கள் கடலூரையே தம் தலைநகராகக் கொண்டு செயலாற்றினர். டூப்ளே முதலிய பிரெஞ்சுக்காரர்கள் கடலூரைக் கைப்பற்ற அரும்பாடு பட்டனர்; நடக்கவில்லை. ராபர்ட் கிளைவ் முதலிய ஆங்கிலேயர்கள் உறுதியுடன் கடலூரைக் காத்தனர்.

கடலூர் முதுநகர்ப் பகுதியிலுள்ள கிளைவ் தெரு, இம்பீரியல் ரோடு, வில்லிங்கடன் தெரு, சோனகர் தெரு, பாரீஸ் கார்னர், கொத்த வால் சாவடி முதலியவையும், கடலூரின் ஆட்சிப் பொறுப்பை ஒருவர் பின் ஒருவராய் ஏற்றிருந்த புரூக், லாதம், கம்மிங், கிஞ்சன் ஆகிய ஆங்கிலேயர்களின் பெயர்களைத் தாங்கிக் கடலூர் நகராட்சிக்குள் இருக்கும் புரூக்ஸ் பேட்டை (புருகேஸ் பேட்டை), கம்மிங்ஸ் பேட்டை (கம்மியம் பேட்டை), லாதம்ஸ் பேட்டை (லதாம் பேட்டை), கிஞ்சன் பேட்டை முதலியவையும், செயின்ட் டேவிட் கோட்டையும் கடலூரின் வரலாற்றுக்குச் சான்று பகரும்.

மற்றும், உரிமைப் போராட்டக் காலத்தில் 1921 செப்டம்பரில் ஒரு முறையும் 1927 செப்டம்பரில் ஒரு முறையும்