பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

கெடிலக்கரை நாகரிகம்


விட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ‘cut என்னும் சொல்லைக் ‘குட்’ என்று சொல்லாமல் ‘கட் என்று சொல்வது போல் இது நடந்து விட்டிருக்கிறது. ‘புதுச்சேரி என்பது பாண்டிச்சேரி” என்று ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்ட கதையும் இது போன்ற எழுத்து மாற்றத்தால் ஏற்பட்ட வினையேயாகும். கூடலூர் என்னும் பெயர்தான் பழைய பெயர்: கடலூர் என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட புதிய பெயரே.

கடலூர் நகராட்சி மூன்று பெரும் பிரிவுகளை உடையது; அவை; திருப்பாதிரிப் புலியூர், மஞ்சக் குப்பம் - புதுப் பாளையம், கூடலூர் என்பன. கடற்கரையிலுள்ள செயின்ட் டேவிட் கோட்டைப் பகுதியை ஒரு தனிப் பிரிவாகக் கொண்டு கடலூர் நகராட்சியை நான்கு பிரிவாகக் கூறுவதும் உண்டு. இவற்றுள் திருப்பாதிரிப் புலியூர், மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம், கோட்டைப் பகுதி ஆகிய மூன்றும் நகராட்சியின் வடபகுதியில் உள்ளன; இப் பகுதிக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் நகராட்சியின் தென்பகுதியில் கூடலூர் உள்ளது. தெற்கேயுள்ள கூடலூர்ப் பகுதியைக் கடலூர் முதுநகர் - Cuddalore Old Town என்றும், வடக்கேயுள்ள திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம், கோட்டைப்பகுதி ஆகியவற்றை இணைத்துக் கடலூர்ப் புதுநகர் - Cuddalore New Town என்றும் அழைக்கின்றனர். Old Town என்பதைச் சுருக்கி O.T. என்றும், New Town என்பதைச் சுருக்கி N.T. என்றும் மக்கள் அழைக்கின்றனர். ஓ.டி. என்.டி. என்று குறிப்பிடுவதுதான் இப்போது பெருவாரியான வழக்காக இருக்கிறது.

முதுநகரில் கூடலூரைத் தவிர வேறு சிறப்புப் பிரிவு கிடையாது. புதுநகரில், திருப்பாதிரிப் புலியூர் நகராட்சியின் மேற்கே இருக்கிறது; செயின்ட் டேவிட் கோட்டைப் பகுதி நகராட்சியின் கிழக்கே கடற்கரையோரமாக இருக்கிறது; இடையிலே மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதி உள்ளது. திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதிக்கும் மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதிக்கும் நடுவே கெடிலம் ஆறு ஒடுகிறது. கெடிலத்தின் குறுக்கே ஒரு நல்ல பாலம் இருக்கிறது. அதன் பக்கத்திலேயே 30 இலட்சம் ரூபாய் செலவில் இப்போது மற்றொரு பாலம் கட்டப்படுகிறது. மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதியில், மஞ்சக் குப்பம் வடக்கிலும் புதுப்பாளையம் தெற்கிலுமாக உள்ளன. மஞ்சக் குப்பத்திற்கும் புதுப்பாளையத்திற்கும் நடுவே பெருவெளித்திடல் (கடலூர் மைதானம்) இருந்து கொண்டு இரண்டையும் பிரிக்கிறது.