பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

கெடிலக்கரை நாகரிகம்


இணைந்திருத்தலின் திருப்பாதிரிப் புலியூரும் நடைமுறை வசதிக்காகப் புதுநகர் என அழைக்கப்பட்டு வருகிறது. நாம் திருப்பாதிரிப் புலியூரைப் பழைய புதுநகர் எனக் கூறலாம். கடலூரின் பெரிய கடைத்தெரு திருப்பாதிரிப் புலியூரில் உருவாகியிருப்பதற்குக் காரணம், இங்கே பாடல் பெற்ற பழம்பெருஞ் சிவன் கோயிலும், புதுப்பெரும் புகைவண்டி நிலையமும் பேருந்து வண்டி நிலையமும் இருப்பதுதான்! இதிலிருந்து, பழம்புது நகராகிய திருப்பாதிரிப் புலியூரின் பழைமையினையும் புதுமையினையும் ஒருசேர உணரலாம்.

இதுகாறுங் கூறிய விரிவான விளக்கத்திலிருந்து, கடலூர் என்னும் பெயர் கூடலூர் என்னும் பெயரிலிருந்து பிறந்ததே என்பது தெற்றென விளங்கும். ஆனால், கடலை அடுத்துள்ள ஊர் கடலூர் எனக் காரண இடுகுறிப் பெயராக இப்பெயர் ஏற்பட்டது என ஒருவகைப் பெயர்க் காரணம் சொல்லப் படலாம் - சொல்லப்படலாம் என்ன - சிலர் சொல்லவுஞ் செய்கின்றனர். கடலூர் என்னும் பெயர் மிகவும் பிற்பட்ட அண்மைக் காலத்தில் ஏற்பட்ட பெயராதலின் இக் காரணம் பொருந்தாது. அங்ங்னமே பொருந்தினும், கடலை அடுத்துள்ள ஊர் கூடலூர்தான்; திருப்பாதிரிப் புலியூரும் மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதியும் கடற்கரைக்கு மேற்கே இரண்டு - மூன்று கி.மீ. தொலைவு தள்ளியிருத்தலின், கடலூர் என்னும் பெயர் கூடலூருக்கே மிகவும் பொருந்தும். மற்றும் சிலர், ‘கெடிலம்’ என்னும் ஆற்றுப் பெயரை ‘கடிலம்’ என்றாக்கிக் கடிலத்திற்கும் கடலூருக்கம் ஒருவகை முடிச்சுப்போட முயல்கின்றனர். இந்தப் பெயர்க் காரணம், நூற்றுக்கு ஒரு விழுக்காடுகூடப் பொருந்தாது. எனவே, கடலூர் என்னும் சேயின் தாய் கூடலூரே என்பது முற்ற முடிந்த முடிபு. அங்ஙனமாயின், கூடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதன் காரணம் என்ன?

கூடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதன் காரணம், இந்நூலில் ‘கெடிலத்தின் முடிவு’ என்னும் தலைப்பில் படத்துடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கூடலூரில் நான்கு கூடல்கள் நிகழ்கின்றன; அவை: (1) கெடிலத்தின் தென் கிளையாகிய உப்பனாறு கடலோடு கூடும் கடல்; (2) சிதம்பரம் வட்டத்திலிருந்து பரவனாறு என்னும் ஒர் உப்பாறு வந்து கடலோடு கூடும் கூடல்; (3) கெடிலத்தின் கிளையாகிய உப்பனாறும் பரவனாறும் தமக்குள் கூடிக் கொள்ளும் கூடல்; (4) உப்பனாறும் பரவனாறும் இணைந்தபடியே கடலோடு கூடும் கடல் என நான்கு கூடல்கள் இங்கே நடைபெறுகின்றன. சுருங்கக் கூறின், இந் நான்கு கூடல்களும் ஒரே கூடலாகி