பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

369


விடுகின்றன. அஃதாவது, உப்பனாறும் பரவனாறும் கூடலூருக்கு அருகில் ஒரே இடத்தில் தமக்குள் இணைந்தபடியே கடலோடு கூடுகின்றன. வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் இரண்டு ஆறுகள் குறிப்பிட்ட ஒரே இடத்தில் தமக்குள் இணைந்தபடியே கடலோடு கூடுவது உலக வியப்புகளுள் ஒன்றல்லவா? இதனால்தான், இந்த வியத்தகு கூடல், கூடலூர் என்னும் பெயர் ஏற்படுவதற்குக் காணமாயிருந்தது. இப்போது கூடலூர் மறைந்து கடலூராகியுள்ளது. முன்பு ‘கூடலூர் தாலுகா என்று குறிப்பிடப்பட்டது இப்போது ‘கடலூர் தாலுகா எனப்படுகிறது. கால வெள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை யாரே தடுக்க முடியும்?

இனி, கடலூர் நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பகுதிகளுள் இன்றியமையாத சிலவற்றைப் பற்றிய விவரங்களைத் தனித்தனியாகக் காண்பாம்:-

தேயமெல்லாம் நின்றிறைஞ்சும்
திருப்பாதிரிப் புலியூர்

[1]'தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூர்” என ஏழாம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசரால் புகழ்ந்து பாடப்பெற்ற திருப்பாதிரிப் புலியூர், இன்றும் தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூராகவே திகழ்கிறது. திருப்பாதிரிப் புலியூர்க் கோயிலுக்கும் புகைவண்டி நிலையத்திற்கும் உள்ள இடைவெளி ஒரு ‘பர்லாங்கு’ தொலைவு இருக்கலாம். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயில் (சந்நிதி) தெருவின் முடிவில் புகைவண்டி நிலையம் இருக்கிறது. நிலையத்தில் நிற்கும் புகைவண்டிகளில் இருந்தபடி மேற்கே பார்த்தால் கோபுர வாயில் தெரியும். வண்டியில் இருந்தபடியே மக்கள் கோயிலை நோக்கி வழிபடுவது வழக்கம். தேயத்து மக்களை ஏற்றிக் கொண்டு வரும் புகைவண்டிகள் அங்கே நிற்கின்றன; வழிபாடு நடக்கிறது. இவ்வகையிலும் ‘தேயமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்” என்னும் புகழ்ச்சி பொருந்துகிறது. எனினும், திருநாவுக்கரசர் குறிப்பிட்டிருப்பது, பண்டைக் காலத்தில் பல தேயத்து மக்கள் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்து வழிபட்ட மையையேயாம்! இதிலிருந்து, ஏழாம் நூற்றாண்டிலேயே திருப்பாதிரிப் புலியூர் பல தேயத்து மக்களும் வந்து வணங்கும் அளவுக்குப்பேரும் புகழும் பெற்றிருந்தமை புலனாகும்.


  1. *திநாவுக்கரசர் தேவாரம் - திருப்பாதிரிப் புலியூர்ப் பதிகம் பாடல் 4 கெ.24.