பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

கெடிலக்கரை நாகரிகம்



இவ்வூர்ப் புகைவண்டி நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் புகைவண்டிப் பாதையில் உள்ளது. கூடலூரில் புகை வண்டிச் சந்திப்பு நிலையம் (Junction) இருந்தாலும், இவ்வூர் நிலையத்திற்கும் சந்திப்பு நிலையத்தின் தகுதி உண்டு. கூடலூரிலிருந்து புறப்படும் வண்டியும் கூடலூரோடு முடியும் வண்டியும் இவ்வூர் நிலையம்வரை வந்துதான் பின்னர்க் கூடலூருக்குச் செல்லும்.

திருப்பாதிரிப் புலியூர் கெடிலம் ஆற்றின் தெற்குக் கரையில் இருக்கிறதா? - வடக்குக் கரையில் இருக்கிறதா? - கிழக்குக் கரையில் இருக்கிறதா? - மேற்குக் கரையில் இருக்கிறதா? என்று சொல்வது அரிது; நான்கு கரைகளிலும் இருப்பதாகச் சொல்லலாம். பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு கெடிலம் இவ்வூரின் தெற்கே ஓடியது; அப்போது ஆற்றின் வடகரையில் ஊர் இருந்தது; அதனால்தான், அப்போது திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் என்னும் நூல் பாடிய தொல்காப்பியத் தேவர்,

‘கடிலமா நதியதன் வடபால்’ (45)
‘மெத்தி வருகின்ற கெடிலத்து வடபாலே’ (100)

என்று கூறியுள்ளார். கிழக்கு நோக்கி ஓடிய கெடிலம் பத்தாம் நூற்றாண்டளவில் திருவயிந்திரபுரம் அருகில் வடக்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர்த் தெற்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் சிறிதுதொலைவு ஓடிக் கடலில் கலக்கிறது. கெடிலத்தின் -ᑨ தலைகீழ்ப் ‘ப’ போன்ற அடைப்புக்கு நடுவில் திருப்பாதிரிப் புலியூர் இருக்கிறது. இவ்வகையில் பார்க்குங்கால், ஊரின் மேற்கே மூன்று கி.மீ. தொலைவிலும், வடக்கே அரை கி.மீ. தொலைவிலும், கிழக்கே கால் கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலம் ஊரை ஒரு சுற்று சுற்றிக் கொண்டு ஓடுகிறது எனலாம்.

இப்பகுதியில் அந்தக் காலத்தில் பாதிரிக்காடு நிறைந திருந்ததாலும், புலிக்கால் உடைய புலி முனிவர் (வியாக்ர பாதர்) வழிபாடு செய்ததாலும் ஊருக்குப் பாதிரிப் புலியூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. புலிக்கால் முனிவர் வழிபட்டது ஒரு புறமிருக்க, பாதிரிக் காட்டில் புலிகளும் இருந்திருக்கலாமல்லவா? இவ்வூர்க் கோயில் மரம் (தல விருட்சம்) பாதிரி என்பது குறிப்பிடத் தக்கது. கோயிலுக்குள் பழங்காலத்தில் இருந்த பாதிரி மரம் ஒன்று பட்டுப்போய் இன்று