பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

371


தகட்டு உறை (கவசம்) போடப்பட்டுப் போற்றிக் காக்கப்பட்டு வருகிறது. கோயிலின் மேற்புற வெளித் திருச்சுற்றில் சில பாதிரி மரங்களை இன்றும் காணலாம். வடமொழியில் பாடலம் என்றால் பாதிரி என்பது பொருள்; எனவே, இவ்வூர் பாடலிபுரம், பாடலி நகர் என அழைக்கப்படுவதும் உண்டு. இவ்வூர் இறைவன் பெயர் பாடலேசுரர் (பாடல+ஈசுரர்) என்பதும் குறிப்பிடற்பாலது.

திருப்பாதிரிப் புலியூர் என்னும் பெயர் ஒரளவு சுருங்கித் திருப்பாப்புலியூர் என்றே இன்று பலராலும் எழுதப்படுகிறது; பேச்சு வழக்கிலோ, திருப்பாப்புலியூர் என்பது மேலும் மேலும் சுருங்கிச் சுருங்கி, திருப்பாலியூர், திருப்பார், திப்பார் என்ற அளவுக்குக் கொச்சையாய் இறங்கி வந்துவிட்டது.

இலக்கியங்களில் இவ்வூருக்குக் கடை ஞாழல், கன்னி வனம், கன்னி காப்பு முதலிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. புலிநகக் கொன்றை என்னும் ஞாழல் மரமும் நிறைந்திருந்ததால் கடைஞாழல் எனவும், இறைவி இவ்வூர் வனத்தில் கன்னியாய் நோன்பியற்றியதால் கன்னி வனம் எனவும் இவ்வூருக்குப் பெயர்கள் ஏற்பட்டனவாம். மற்றும், திருப்பாதிரிப் புலியூர் பாதிரிப் புலியூர் எனவும், புலியூர் எனவும், அதன் மரூஉவாகப் புலிசை எனவும் வழங்கப்படுவதும் உண்டு ‘பாதிராப் புலியூர்’ என்னும் பெயரில் வேறிடங்களிலுள்ள சில ஊர்களினின்றும் திருப்பாதிரிப் புலியூரை வேறு பிரித்துணர வேண்டியது இன்றியமையாததாகும்.