பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

கெடிலக்கரை நாகரிகம்



மிக அழகான திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலின் பெயர் பாடலேசுரர் கோயில், இறைவன் பெயர்கள்; தோன்றாத் துணைநாதர், பாடலேசுரர்; இறைவியின் பெயர்கள்; தோகாம்பிகை, பெரிய நாயகி என்பன. இக்கோயிலின் தோற்றத்தை முன்னுள்ள படத்தில் காணலாம்.

கோயிலின் முகப்பிலுள்ள கோபுரமும், கோயிலை ஒட்டியுள்ள திருக்குளமும் படத்தில் தெரிவதைக் காணலாம். சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் தனித்தனியாக உள்ளன. சிவன் கோயிலின் இடப்புறத்தே அஃதாவது வடபுறம் அம்மன் - கோயில் உள்ளது. அம்மன் கோயிலுக்குத் தனிக்கோபுரவாயில் உண்டு. இரண்டு கோயில்கட்கும் இடையிலும் வழி உண்டு. அம்மன் கோயிலை ஒட்டினாற்போல் அதன் வடபுறத்தே வடக்கு நோக்கியிருக்கும் பிடாரி கோயில் காணத்தக்கது. அம்மன் கோயிலுக்குச் செல்பவர் பிடாரி கோயிலுக்கும் தவறாது செல்வது மரபு.

திருப்பாதிரிப் புலியூர் நாவுக்கரசரின் தேவாரப் பதிகமும் ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகமும் அருணகிரியாரின் திருப்புகழும் பெற்றது. பட்டினத்தாரும் இவ்வூரைப் பாடியுள்ளார். இங்கே சோழர் - பாண்டியர் காலக் கல்வெட்டுகள் பல உள்ளன. தொல்காப்பியத் தேவர் இவ்வூர்மேல் கலம்பகமும், இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இவ்வூர்மேல் புராணமும் பாடியுள்ளனர். வடமொழியிலும் இவ்வூருக்குப் புராணம் உண்டு. முயலுருப்பெற்றிருந்த மங்கணமுனிவர் நற்பேறு பெற்றது முதலான செய்திகள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

இவ்வூரைச் சார்ந்திருந்த பாடலி புத்திரம் என்னும் இடம் பண்டு சமணர்களின் தலைமையகமாய் விளங்கியது; நாவுக்கரசர் தொடக்கத்தில் ‘தருமசேனர்’ என்னும் பட்டப் பெயருடன் சமணர் தலைவராய் விளங்கியது இந்தப் பகுதியில்தான். சைவராக மாறிய அவரைச் சமணர்கள் கல்லிலே கட்டிக் கடலிலே போட, அவர் கரையேறி வந்து திருப்பாதிரிப் புலியூர் இறைவன்மேல் ‘ஈன்றாளுமாய் என்னும் பதிகம் பாடி வழிபட்டார். மிகச் சிறந்த இப்பதிகத்தின் நான்காம் பாடலில்தான், ‘தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூர் மேய நல்லான்’ என அவர் பாடியுள்ளார். நாவுக்கரசர் சைவத்திலிருந்து சமணத்திற்கு வந்தது. மீண்டும் சைவராக மாறியது, அதனால் அவருக்குச் சமணர்கள் இழைத்த கொடுமைகள், அவர் அவற்றினின்றும் தப்பிப் பல்லவ