பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

373


மன்னனையும் சைவராக மாற்றியது முதலிய நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட ‘பூம்புலியூர்’ என்னும் பெயருடைய நாடகம் ஒன்று இற்றைக்கு ஏழு அல்லது எட்டு நூற்றாண்டு கட்கு முன்பே நடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

திருப்பாதிரிப் புலியூரின் மேற்கு எல்லையிலுள்ள பெருமாள் கோயிலும், கிழக்கு எல்லையில் கெடிலக் கரையிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலும் குறிப்பிடத் தக்கவை. ஆஞ்சநேயர் கோயிலில், இலங்கைக்குத் தாவுவது போன்ற மிடுக்கான தோற்றத்தில் மிக்கவேலைப்பாட்டுடன் வடிக்கப்பட்டிருக்கும் ஆஞ்சநேயர் சிலை மிகவும் காணத்தக்கது. இற்றைக்குக் கால் நூற்றாண்டுக்குமுன் மிகப் பெரும் புகழ் பெற்று விளங்கிய ஞானியார் அடிகளாரின் மடம் சிவன் கோயில் தெருவில் உள்ளது.

திருப்பாதிரிப் புலியூரில் வைகாசித் திங்களில் பன்னிரண்டு நாள் பெருவிழா (பிரம்மோற்சவம்) நடைபெறும். திருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய வைகாசிப் பருவத்தில் தேரோடும் விழா நடைபெறும். பல ஆண்டுகட்குமுன் இவ்வூரில் இருந்த மிகப் பெரிய தேர் யாராலோ கொளுத்தப்பட்டுவிட்டது. திருவிழாவின் ஆறாம் நாள் இரவு வெள்ளித் தேர் விழா நடைபெறும். முழுதும் வெள்ளித் தகடு இட்ட தேரில் மின்விளக்கு ஒப்பனையுடன் இறையுருவம் உலாவருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இவ்விழாவிற்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வருவர். கார்த்திகைத் திங்களில் நடைபெறும் வெள்ளி விமான விழாவும் காணத்தக்கது.

கடலூரில் மாசி மகவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். திருப்பாதிரிப் புலியூர், வண்டிப் பாளையம், திருமாணி குழி, திருவயிந்திரபுரம், திருக்கோவலூர் முதலிய ஊர்களிலிருந்து இறையுருவங்கள் கடலூர்க் கடற்கரைக்குச் சென்று நீராடும். இந்தப் பக்கத்தில் இவ்விழா மிகப் பெரிய விழாவாகும். இவ்விழாவிற்கு நூறாயிரக் கணக்கில் மக்கள் வருவர். இவ்விழாவின் உறுப்பாகப் பலவகைக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆண்டு தோறும் தைத் திங்கள் ஐந்தாம் நாளில் பெண்ணையாற்றுத் திருவிழா நடைபெறும் இவ்வூர் இறையுருவமும் இன்னும் பல ஊர் இறையுருவங்களும் பாகூருக்கு நேரேயுள்ள பெண்ணையாற்றங் கரைக்கு எழுந்தருளும். தைத் திங்களிலேயே இரதசப்தமியன்று ஒரு முறை வில்வராய நத்தத்திற்கு அடுத்தாற் போலுள்ள பெண்ணை யாற்றங்கரைக்கு இறையுருவங்கள் செல்லும், தைத்