பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

கெடிலக்கரை நாகரிகம்


திங்களிலேயே அமாவாசை நாளன்று இறையுருவங்கள் கடலுக்குச் சென்று வரும். ஆனிப் பருவத்தில் பாடலேசுரர் காராமணிக்குப்பம் அருகிலுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கிருந்து கெடிலத்திற்குச் சென்று நீராடும் விழா நடைபெறும்.

பாடலேசுரர் ஆண்டிற்கு இருமுறை கரையேற விட்ட நகர் என்னும் வண்டிப்பாளையத்திற்கு எழுந்தருளுவார்; அந்நாட்கள். அப்பர் கரையேறிய சித்திரை அனுடம், வண்டிப்பாளையம் பங்குனிப் பெருவிழாவின் ஆறாம் நாள் ஆகியவை. பாடலேசுரர் கோயிலுக்கு நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் புரிந்துள்ள அரும்பெரும் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கன.

திருப்பாதிரிப் புலியூர் திருக்கோயிலால் மட்டுமன்றிக் கடைத் தெருவாலும் கடலூரில் இன்றியமையாமை பெற்றுள்ளது. மஞ்சக்குப்பம் - புதுப்பாளையம் பகுதியில் உள்ளவர்களும் பிற பகுதியினரும் இன்றியமையாப் பொருள் வாங்குவதற்கு இங்கேதான் வருவர். கடைத்தெரு, புகைவண்டி நிலையம், பேருந்து வண்டி நிலையம் ஆகியவை அடுப்புக் கூட்டியதுபோல் அண்மையில் உள்ளன. இத்தகு சூழ்நிலையால் கடைத்தெரு எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கும்.

இவ்வூரில் மருத்துவமனைகள் இரண்டும், பெண்கள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஒன்றும், பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றும், ஆண்கள் உயர்நிலைப்பள்ளி ஒன்றும் திரைப்படக் கொட்டகைகள் இரண்டும் உள்ளன. இவ்வூரில் உள்ள ‘முத்தையா ஹால்’ என்னும் திரைப்படக் கொட்டகை முன்பு நாடக அரங்காக இருந்தது. அன்று தமிழகத்திலேயே முத்தையா ஹால்தான் மிகப் பெரிய நாடக மாளிகை என்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் கேள்விட்டிருக்கிறேன்.

கம்மியன் பேட்டை

1778ஆம் ஆண்டு கடலூரில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ‘வில்லியம் கம்மிங்’ (Wills cuming) என்பவர் பெயரால் ஏற்பட்டது கமிங்ஸ்பேட்டை. இஃது இப்போது கம்மியன் பேட்டை என வழங்கப்படுகிறது. இவ்வூர் 1798 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானால் அழிக்கப்பட்டது, அப்போது அங்கிருந்த நெசவாளர் குடும்பங்கள் வெளியேறிவிட்டனவாம். கம்மியன் பேட்டை திருப்பாதிரிப் புலியூரை ஒட்டி வடபால் உள்ளது: இரண்டிற்கும் இடையே புகைவண்டிப் பாதை செல்கிறது.