பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. கெடிலத்தின் பயணமும்
துணைகளும்

கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூர்ப் பகுதியில் தோற்றமெடுக்கும் கெடிலம், அவ்வட்டத்தில் கிழக்கு நோக்கி ஏறக்குறைய எட்டு கி.மீ. தொலைவு ஓடித் திருக்கோவலூர் வட்டத்துக்குள் புகுகிறது; திருக்கோவலூர் வட்டத்தில் அரியூர் வரைக்கும் கிழக்கு நோக்கி ஓடிப் பின்னர் வடகிழக்காய் வளைந்து செல்கிறது; 10 கி.மீ. தொலைவு அளவு வடகிழக்காய் ஓடிய பின்பு தென் கிழக்காய்த் திரும்புகிறது; 20 கி.மீ. தொலைவு அளவு தென்கிழக்காய் ஓடிவந்து, பரிக்கலுக்கும் பாதூருக்கும் இடையே உள்ள மாறனோடை என்னும் ஊருக்கருகில் மீண்டும் கிழக்கு நோக்கிச் சென்று, சேந்தநாடு என்னும் ஊருக்கு வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் கடலூர் வட்டத்துக்குள் புகுகிறது. அங்கிருந்து கடலூர் வரைக்கும் சிறிது தொலைவு கிழக்கும் - சிறிது தெலைவு வடகிழக்கும் - சிறிது தொலைவு தென் கிழக்குமாக மாறி மாறி வளைந்து நெளிந்து நெளிந்து வளைந்து சென்று கடலூருக்கு அருகில் வங்கக் கடலில் கலக்கிறது. பிறப்பிடத்திலிருந்து முடிவிடம் வரைக்குமான கெடிலத்தின் பயணத் தொலைவின் நீளம் ஏறக்குறைய 112 கி.மீ. (70 கல்) ஆகும்.

கெடிலம் கள்ளக்குறிச்சி வட்டத்திலும் திருக்கோவலூர் வட்டத்தின் முற்பகுதியிலும் பெரும்பாலும் பாறைகள் நிறைந்த பாதையிலே வருகிறது என்று சொல்லலாம். இப் பகுதியில் சில இடங்களில் கெடிலத்தின் கரைகளையொட்டி வண்டியும் செல்ல முடியாத அளவுக்குப் பாறை நெருக்கம் மிக்குள்ளது. பல இடங்களில் ஆற்றுப் படுகையில் மணலைக் காண்பது அரிது. அந்த வட்டாரத்தில் அண்மைக்கு அண்மையில் சிறுசிறு பாறைகளும் சிறுசிறு கற்குன்றுகளும் இருக்கக் காணலாம். பாறையோ குன்றோ இல்லாத இடங்களில் தனித்தனிக் கற்களாயினும் தரைக்கு மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கும்.

திருக்கோவலூர் வட்டத்தில் சேந்தமங்கலம் - திருநாவலூர்ப் பகுதிக்குக் கிழக்கிலிருந்து பாறைகளையும் கற்குன்றுகளையும் அவ்வளவாகப் பார்க்கமுடியாது. இங்கிருந்துதான் ஆற்றுப்