பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

கெடிலக்கரை நாகரிகம்


கேந்திரமாய்த் திகழ்ந்த திருப்பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் சமணசமயத்திற்குச் சிறப்பிடம் அமைக்க முனைந்தனர்; அதன் பயனாய் உருவானதே பாடலிபுத்திரம். அங்ஙனமெனில், திருப் பாதிரிப் புலியூருக்கு நேர் வடக்கே 5 கி.மீ தொலைவிலுள்ளதும் பண்டு பெரிய வடமொழிப் பல்கலைக்கழகம் திகழ்ந்ததுமான பாகூர் பாடலிபுத்திரமாக இருந்திருக்கலாமோ எனில், இல்லை, பாகூருக்குப் பாதிரிமரத் தொடர்பு இல்லை; மற்றும், ஏழாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரம் மகேந்திரவர்மப் பல்லவனால் கலைக்கப்பட்டுவிட்டது; பாகூரோ ஒன்பதாம் நூற்றாண்டிலும் சிறப்புற்றிருந்ததாகத் தெரிகிறது. பாகூர் வட மொழிப் பல்கலைக்கழகத்திற்கு ஒன்பதாம் நூற்றாண்டில் நிருபதுங்க வர்மப் பல்லவன் மூன்று சிற்றார்களை அளித்த செய்தி அறியப்பட்டுள்ளது. எனவே, ஏழாம் நூற்றாண்டிலேயே வீழ்ச்சியடைந்துவிட்ட பாடலிபுத்திரம் பாகூர் அன்று.

திருப்பாதிரிப்புலியூரினும் வேறாகச் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ள பாடலிபுத்திர நகரம், திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் தனியாக இருந்தது என்று உய்த்துணர வாய்ப்பிருக்கிறது. திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் ‘பாதிரிக்குப்பம்’ என்னும் சிற்றூர் ஒன்று இப்போதும் உள்ளது. இவ்வூர், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் திருப்பாதிரிப் புலியூருக்கும் திருவயிந்திரபுரத்திற்கும் நடுவில் உள்ளது. இந்தப் பாதிரிக்குப்பம் இருக்கும் பகுதியில்தான் பழைய பாடலிபுத்திரம் இருந்திருக்கக் கூடும். இதற்குச் சான்றுகள் இல்லாமற் போகவில்லை; அவையாவன:

{1} பாதிரிக்குப்பத்திற்கும் திருவதிகைக்கும் ஏறக்குறைய 20 கி.மீ. தொலவுதான் இருக்கும். சூலை நோய் கொண்டிருந்த நாவுக்கரசர் இந்தப் பகுதியில் நள்ளிரவில் புறப்பட்டுப் பையப் பைய நடந்திருப்பினும் விடிவதற்குள் திருவதிகை சென்றடைந்து விட்டிருக்க முடியும். இந்த இரண்டு ஊர்களும் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

(2) அந்தக் காலத்தில் பாதிரி மரங்கள் நிறைந்திருந்ததால் பாதிரிக்குப்பம் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப் படுகிறது. பாடலிபுத்தரம் என்றாலும் பாதிரி மரங்கள் நிறைந்த இடம் என்பதுதான் பொருள்; எனவே, பெயர்க்காரணத்தாலும் இந்தக் கருத்து பொருத்தமானது என்பது புலப்படும்.

(3) இந்த நூலில் கெடிலத்தின் திசை மாற்றம், கெடிலத்தின் தொன்மை என்னும் தலைப்புகளில் பாதிரிக் குப்பம் முத்தால்