பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

கெடிலக்கரை நாகரிகம்


இஃது எனக்கும் முதியவருக்கும் இடையே நடந்த வினாவிடை உரையாடல், முதியவர் கிறித்தவக் கோயிலா யிருக்கும் என்று சொன்னது சரியன்று. சமண பௌத்த மதங்களைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாதாதலின் கிறித்தவக் கோயிலாயிருக்கலாம் என்று சொன்னார். மேலும், அங்கே கிறித்தவர்கள் இல்லையாதலின் கிறித்தவக் கோயில் எழக்காரணம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆங்கிலேயர் ஆட்சியில் அஃது அழிவதற்குக் காரணம் இல்லை. அன்றியும் பழைய காலத்தில் அங்கே கிறித்தவக் கோயில் ஏற்பட வாய்ப்பில்லை. நான் கேட்டதற்காக, அவர் அறிந்த வேறு மதத்தை அம்முதியவர் குறிப்பிட்டார். சமணத்தைப் பற்றி அவருக்குத் தெரியாது. அழிந்து போன கோயில் குடிக்காடு இந்தப் பகுதியில் எங்கேயிருந்தது என்று நான் கேட்டதற்கு, முதியவர் நெடும் பாதையின் வடக்குப் புறமாகக் கையை நீட்டிக் காட்டினார். இந்த உரையாடல் நமது கருத்துக்கு ஓரளவு துணைபுரிகிறது.

(4) பாதிரிக் குப்பத்திற்கு மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் நெடும்பாதையில் குமரப்ப நாய்க்கன் பேட்டை என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரின் முகப்பில் பாதையோரம் வடபுறமுள்ள ஒரு சத்திரத் தோட்டத்தில் ஒரு சமணச்சிலை மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை மேலேயுள்ள படத்தில் காணலாம்.

இந்தப் படம் காலைவேளையில் எடுத்தது. சிலை மேற்கு நோக்கியது; பின்னால் கிழக்குப்புறம் ஞாயிற்றின் ஒளி; அதனால்