பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

383


சிலையின் முகம் தெளிவாக விழவில்லை. சிலையில் முகம் தெளிவாகத்தான் இருக்கிறது. இது குமரப்ப நாய்க்கன் பேட்டையில் இருப்பதால் இதனைப் ‘பேட்டைக் கல்’ என்று சுற்றுவட்டாரத்து மக்கள் அழைக்கின்றனர். மேற்கே சில கி.மீ. தொலைவில் வயலைக் கொத்தி உழுதபோது இந்தச் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது சமணச் சிலையேதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்தச் சூழ்நிலையை வைத்துக் காணுங்கால்; இந்த வட்டாரத்தில் ஒரு காலத்தில் சமண சமயம் தழைத்துச் செழித்திருந்தமை புலனாகும். .. மேற்கூறிய சான்றுகளைக் கொண்டு, பாதிரிக்குப்பம் இருக்கும் பகுதியில் பழைய பாடலிபுத்திரம் இருந்திருக்கக் கூடும் என்றும், பாடலிபுத்திரம் வேறு - பாதிரிப்புலியூர் வேறு என்றும் உய்த்துணரலாம். உண்மை இங்ஙனமிருக்க, இரண்டையும் ஒன்றென ஆராய்ச்சியாளர்கள் கொண்டதற்குக் காரணம், இரண்டும் பக்கத்தில் - பக்கத்தில் இருந்தமையே! மற்றும், பாடலிபுத்திரம் ஒரு பெரு நகரமாக இலக்கியங்களில் படைத்துக் காட்டப்பட்டிருப்பதாலும் - திருப்பாதிரிப் புலியூர் இன்று ஒரு பெருநகரமாகத் திகழ்வதாலும் - அந்த நகரம் இந்த நகரமாகத்தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் மயங்கிவிட்டனர். இன்றைய ஆராய்ச்சியாளரையும் அணைத்துக் கொள்ளும் முறையில் இந்தச் சிக்கலுக்குப் பின்வருமாறு கூறித் தீர்வு காணலாம். ‘பண்டு பாடலிபுத்திரமும் பாதிரிப்புலியூரும் இரட்டை நகரங்களாகத் திகழ்ந்தன’ என்பதுதான் அந்தத் தீர்வு!

பாட்னா - பாடலி புத்திரம்

பாடலிபுத்திரம் என்றதும், ஆராய்ச்சியாளர் பலர்க்கும் மற்றும் ஓர் ஊர் நினைவிற்கு வரும். இன்று பீகார் மாநிலத்தின் தலைநகராயிருக்கும் பாட்னா அன்று பாடலிபுத்திரம் என அழைக்கப்பட்டது. பாட்னா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து. பழைய பாட்னா - பாடலிபுரத்தின் சிறப்புகள் புலனாகியுள்ளன. அப் பாடலிபுத்திரம், கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளிலுமாக 900 ஆண்டுகாலம் மிகவும் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. கி.மு. 320 தொட்டு கி.மு. 185 வரை மௌரியர் ஆட்சியிலும், கி.மு. 185 தொட்டு கி.மு. 73 வரை சுங்கர் ஆட்சியிலும், கி.பி. 320 முதல் கி.பி. 600 வரை குப்தர் ஆட்சியிலும் பெரும் புகழ்பெற்று விளங்கியது.

இந்தப் பாடலி புத்திரம் ‘பாடலி’ என்னும் பெயரில் தமிழ் நூல்களிலும் புகழப்பட்டுள்ளது. படுமரத்து மோசி கீரனார்