பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

385


இன்னும் கேட்டால், ‘பாடலிபுத்திரம் என்னும் பெயர் பாட்னா - பாடலிபுத்திரத்தைக் காட்டிலும் கடலூர்ப் பாடலி புத்தரத்திற்கே மிகவும் பொருந்தும்’ என்று பன்மொழிப் புலவர் டாக்டர் சுநீதி குமார் சாட்டர்ஜி என்னும் வங்காளப் பெரியார் அழுத்தம் திருத்தமாக சான்றுகள் காட்டி அடித்துக் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

இஃதன்றி, பாடலிபுத்திரம் என்னும் பெயர் வடக்கேயிருந்து தெற்கே இறக்குமதியானதைப் போலவே, அப்பாடலி புத்திரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த ‘மகத தேசம்’ என்னும் நாட்டின் பெயரும் தெற்கே இறக்குமதியாகி யிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஃதாவது கடலூர்ப் - பாடலிபுத்திரம் இருந்த திருமுனைப்பாடி நாடும் மகதநாடு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டதை ஈண்டு நினைவுகூர வேண்டும். இச் செய்தியை இந்நூலில் ‘கெடில நாடு’ என்னும் தலைப்பில் காணலாம்.

வடக்கே பாலிபுத்திரம் அழிந்துவிட்டதைப் போலவே தெற்கேயும் பாடலிபுத்திரம் அழிந்து விட்டது. வடக்கே பாட்னா பகுதியை அகழ்ந்து ஆராய்ந்தது போலவே, தெற்கே கடலூர்ப் பாதிரிக்குப்பம் பகுதியை அகழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் எத்தனையோ உண்மைகள் தெரிய வரலாம்.

இதுகாறும் கூறியவாற்றால் பாடலிபுத்திரம் என்னும் பெயர் ஏற்பட்டதற்குக் காரணம் எதுவாயிருப்பினும், பெரிய புராணச் சான்றின்படி, பாடலிபுத்திரமும் பாதிரிப்புலியூரும் பக்கத்தில் பக்கத்தில் இருந்த தனித்தனி நகரங்கள் - இரட்டை நகரங்கள் என்பது தெளிவு.

வண்டிப் பாளையம் என்னும்
கரையேற விட்ட குப்பம்

வண்டிப்பாளையம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில், கேப்பர் மலைக்குப் போகும் சாலையில் உள்ளது. நகரிலிருந்து இவ்வூருக்கு உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி உண்டு. வண்டி போகும் சாலை கண்கட்கு விருந்தாகும். சாலையின் இருமருங்கும் தென்னை மரங்கள் வரிசையாக வானளாவி நிற்கும். தென்னை மர வரிசைக்குப் பின்னால் நன்செய் வயல்களும் தென்னந் தோப்புகளும் பின்னிப் பிணைந்திருக்கும். கெடிலம் ஆற்றிலிருந்து பிரியும் பெரிய கால்வாயிலிருந்து பல சிறு கால்வாய்கள் பிரிந்து

கெ.25.