பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

389


கொண்ட பதினெட்டாம் நூற்றாண்டில் வண்டிப்பாளையம் என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும், எதையும் உறுதியாகச் சொல்லமுடியாது.

வண்டு நகர் - வண்டுபுரம்

இவ்வூருக்குக் கரையேறவிட்ட நகர், கரையேற விட்டவர் குப்பம் என்னும் பெயர்களேயன்றி, வண்டு நகர் வண்டுபுரம் - சித்திபுரம், என்னும் பெயர்களும் வழங்கப் பட்டதாகக் கரையேற விட்ட நகர்ப் புராணம் கூறுகிறது. சிவபெருமான் ஒருமுனிவர் உருக்கொண்டு வந்து கரையேற விட்ட நகர்ச் சோலையில் யாழ் மீட்டி வண்டு போல இன்னிசை எழுப்பினாராம்; அதனால் வண்டுநகர் எனப் பெயர் ஏற்பட்டதாம் - எனக் கூறகிறது அந்நூல், இதற்காக அந்நூலில் ‘வண்டு நகர்ப் படலம்’ என ஒரு படலமே உள்ளது. அப் படலத்தில் இப் பெயரையும் பெயர்க் காரணத்தையும் அறிவிக்கும் பாடல் வருமாறு:

"மலர்க்கண் ரீங்காரம் செய்யும்
வண்டதின் முழக்க மேபோல்
அலர்க்கண் வார்சோலை யின்கண்
டவமுனி முழக்கும் ஓசை
புலப்பட எழுந்த தாலே
பொருந்தும் அந் நகர்க்கு நாமம்
வலப்படச் சார்ந்த தொண்சீர்
வண்டுமா நகர மென்றே.” (27)

நீர்வளம் நிலவளம் மிக்க ஊராதலின் சோலைகள் பூத்துக் குலுங்கித் தேன் பிலிற்றுகின்றன; வண்டுகள் மலர்களைச் சூழ்ந்து ஊதுவதால் ‘வண்டுபுரம்’ என்னும் பெயர் ஏற்பட்டது என்னும் குறிப்பில்,

"அந்தண் போது சார்ந்து ஊதும் வண்டுபுரம்” (37)

எனவும் அதே படலத்தில் கூறப்பட்டுள்ளது. புராண ஆசிரியர், வண்டுநகர் - வண்டு புரம் என்னும் பெயர்களிலிருந்து வண்டுப் பாளையம் என்னும் பெயர் உருவாகிப் பின் வண்டிப் பாளையம் என்னும் பெயர் உருவாகிப் பின் வண்டிப் பாளைய மாயிற்று என்னும் கருத்தைக் கற்பிப்பதற்காக, இப் பெயர்க் காரணங்களைப் புனைந்து கூறியிருப்பாரோ - என்னவோ!

சித்திபுரம்

இவ்வூருக்குச் சித்திபுரம் என்னும் பெயரும் ஏற்பட்டிருந்ததாகப் புராணம் கூறுகிறது. சிவபெருமான்