பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

கெடிலக்கரை நாகரிகம்


சித்தராய் வந்து, மாணிக்க வாசகருக்காகக் கெடிலத்தை வடக்கு நோக்கி ஏகச் செய்து சித்தி பல புரிந்ததனால் சித்திபுரம் என்னும் பெயர் ஏற்பட்டதாம். இதனை, கரையேறவிட்ட நகர்ப்புராணம் - சித்தர் திருவிளையாடற் படலத்திலுள்ள

"அத்தகுதென் திசைக்கங்கை யிருபுறமுஞ் சித்தேசன்
அமலப் பூந்தாள்
வைத்துவிளை யாடியமா வியத்தான மன்னதனால்
வாய்ந்த தந்தச்
சுத்தமுறுங் கரையேற விட்டநகர் சித்தபுரத்
தூவார் நாமம்
சித்திபுரம் எனநலோர் செப்பிடுவார் அருந்தவத்திற்
சிறந்த சான்றீர்”

என்னும் (45) பாடலால் அறியலாம்.

இவ்வூரில் முன்பு இருந்து இப்போது சிதைந்து போனதாகக் கருதப்படும் சிவன் கோயில் இறைவன் பெயர் காட்சிநாதர், திருக்காட்சிபிரான் என்பதாகவும். இறைவி பெயர் காட்சி நாயகி, தெரிசனாம்பிகை என்பதாகவும் கரையேறவிட்ட நகர்ப் புராணத்தால் அறியப்படும் செய்தி ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

வண்டிப் பாளையம் பழைய வண்டிப் பாளையம் எனவும் புதுவண்டிப் பாளையம் எனவும் இரு பிரிவாக அமைந்துள்ளது. திருப்பாதிரிப் புலியூரிலிருந்து கேப்பர் மலைக்குப் போகும் சாலையின் கீழ்பால் இருப்பது பழைய வண்டிப் பாளையம், மேல்பால் இருப்பது புதுவண்டிப் பாளையம் இரண்டும் இணைந்தே உள்ளன.

பழைய வண்டிப்பாளையம்

இங்கே திருநாவுக்கரசர் திருமடமும் அதனையொட்டிக் கற்பக விநாயகர் கோயிலும் உள்ளன. கோயிலில் திருநாவுக்கரசர் சிலையும் உண்டு. அப்பர் கரையேறிய இடம் என்பதற்கு இது போதிய சான்று. சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் ‘கரையேறவிட்ட நகர் திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திர நவமணி மாலை கற்பக விநாயகர் இரட்டை மணிமாலை என்னும் நூல்கள் இயற்றியுள்ளார். பழைய வண்டிப் பாளையத்தில் ‘சிறுத் தொண்டர் அமுது படையல் விழா சிறப்பாக நடைபெறும். இங்கே, பாரி கம்பெனியார் 1843 ஆம் ஆண்டு ஒரு கரும்பாலை நிறுவினர். அது தொடர்ந்து வெற்றியுடன் நடைபெறவில்லை. ஊரின் கிழக்கெல்லையிலுள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்றும் கரும்பாலையின் புகைபோக்கியைக் காணலாம்.