பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392

கெடிலக்கரை நாகரிகம்


அமாவாசையன்றும் மாசி மகத்தன்றும் கடற்கரைக்குச் சென்று நீராடி வருவார். மாசி மகப் பெருவிழாவன்று நூற்றுக் கணக்கான இறையுருவங்கள் கடற்கரைக்கும் செல்லும். அவற்றுள், திருப்பாதிரிப் புலியூர் இறையுருவம் முதலாவ தாகவும், திருமாணி குழி இறையுருவம் இரண்டாவதாகவும், வண்டிப் பாளையம் இறையுருவம் மூன்றாவதாகவும் செல்வது தொன்றுதொட்ட மரபு. இம் மரபை மாற்ற முடியாது. இதைக் கொண்டு, வண்டிப் பாளையம் முருகன் கோயிலின் சிறப்பை உணரலாம். இக் கோயில் முருகன்மேல், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடம் - இரண்டாம் பட்டத்து அடிகளார், ‘முருகர் அந்தாதி’ என்னும் நூல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வண்டிப் பாளையத்தில் நகர் மன்றம் நடத்தும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுள்ளது. ஞானியார் அடிகளார் அடக்கம் செய்யப்பட்டுள்ள ‘சாமியார் தோட்டம்’ என்னும் பகுதி ஊருக்கு அருகில் இருப்பதும் ஒரு சிறப்பு.

தொழில் துறையிலும் வண்டிப் பாளையம் சிறப்புற்றுத் திகழ்கிறது. வண்டிப் பாளையம் தென்னங் கீற்றுகளுக்குச் செல்வாக்கு மிகுதி. பொம்மை செய்யும் தொழிலும் இங்கே நடைபெறுகிறது; இந்த வட்டாரத்துக் களிமண் அதற்கேற்ற நயப்பு உடையது.

வண்டிப் பாளையத்தைத் தலைசிறந்த ஒரு நெசவுத் தொழிற் பேட்டையாகச் சொல்லலாம். இங்கே நெசவாளர் குடும்பங்களே மிகுதி. இவ்வூரில் கைலிகளே நெய்யப்படுகின்றன. இவ்வூர்க் கைலிகள் மிகவும் தரம் உள்ளவை என வெளி நாடுகளில் புகழ் பெற்றுள்ளன. இவ்வூரில் கைலி வாணிக நிலையங்கள் (கைலி கம்பெனிகள்) பலவும், சாயத் தொழிற் சாலைகள் பலவும் உள்ளன. இவ்வூர்க் கைலிகள் வணிக நிலையங்களின் வாயிலாக, சிலோன், சிங்கப்பூர், சரவாக், போர்னியோ, மலேயா, தாய்லாந்து, ஹாங்காங், இந்தோனேசியா, பர்மா, பாகிஸ்தான், மோரிசு, ஏடன், அமெரிக்கா முதலிய நாடுகட்குச் சென்றன - செல்கின்றன. இவ்வூர்க் கைலி வணிகர் சிலர்க்கு, இந்தோனேசியா ஏடன் முதலிய வெளிநாடுகளிலும் கிளை வணிக நிலையங்கள் உண்டு. வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவிற்கு இழுத்துத் தரும் இன்றியமையா நிலைகளுள் (முக்கியக் கேந்திரங்களுள்) வண்டிப் பாளையமும் ஒன்று. அமெரிக்க டாலரை வாங்கித் தரும் ‘வண்ணம் மாறும் சென்னைத் துணிகள்’ எனப்படுபவை வண்டிப் பாளையத்திலிருந்தும் செல்கின்றன. கைலி ஏற்றுமதி முன்பு கூடலூர்த் துறைமுகத்தின் வாயிலாகவும் நடந்தது; இப்போது சென்னைத் துறைமுகத்தின் வாயிலாகவே நடைபெறுகிறது.