பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

கெடிலக்கரை நாகரிகம்


பத்தாயிரம் நூல்கள் இருக்கலாம். இந்த மைய நூலகத்தின் கீழ், பல ஊர்களில் கிளை நூலகங்களும் (Branch Libraries) நூல் அளிக்கும் நிலைகளும் (Delivery Stations) உள்ளன. மற்றும், தென்னார்க்காடு மாவட்டத்தில் ஒரு நூறு அளவிற்கு ஊராட்சி மன்ற நூலகங்கள் உள்ளன. அண்மையில் பாடலிபுத்திரத்திலும் பாகூரிலும் அந்தக் காலத்தில் இருந்த சிறந்த நூல் நிலையங்களை நினைவூட்டும் முறையில், தென்னார்க்காடு மாவட்ட மைய நூலகம், மக்களின் பல்துறை அறிவை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டு வருகிறது.

மஞ்சக் குப்பம்

மஞ்சக் குப்பம் புதுப்பாளையத்திற்கு வடக்கே இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளையும் பெருவெளித்திடல் (மைதானம்) பிரிக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமை உறுப்புகளும் தலைமை அலுவலகங்களும் மஞ்சக் குப்பத்தில் தான் உள்ளன. இதனால், தென்னார்க்காடு மாவட்டத்தை ‘மஞ்சக் குப்பம் ஜில்லா’ என அழைக்கும் வழக்கம் இருக்கிறது. இங்கே முன்பு மஞ்சள் நிரம்பப் பயிரிடப்பட்டதால் இந்தப் பகுதி மஞ்சள் குப்பம் - மஞ்சக் குப்பம் என வழங்கப்பட்டது. வெளிநாடுகளுடன் மஞ்சள் வாணிகம் மிகுதியாய் நடைபெற்றது. புதுப்பாளையம் போலவே மஞ்சக் குப்பம் நகர்ப் பகுதியும் ஐரோப்பியர்களின் காலத்தில் - பதினேழாம் நூற்றாண்டளவில் உருவானதே.

தென்னகத்திற்கே மிகப் பெரியதான ‘நகர் நடுப் பெருவெளித்திடல்’ (மைதானம்) மஞ்சக் குப்பத்தில்தான் உள்ளது. இது, ‘மஞ்சக் குப்பம் மைதானம்’ ‘கடலூர் மைதானம்’ என அழைக்கப்படும். இதன் தரையில் பசும்புல் படர்ந்து ஒட்ட நறுக்கப்பட்டதுபோல் காணப்படும். இந்தத் திடல் பழைய அரசு குறிப்புகளில், ‘The lawn’ (இன்பப் புல்வெளிப் பூங்கா) எனவும், ‘The green’ (பச்சைப் பசும்புல் திடல்) எனவும், ‘The Esplanade’ (கோட்டைக்கும் நகருக்கும் நடுவிலுள்ள அகலிடம்) எனவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் திடலின்கண் மாலை வேளையில் மக்கள் கூட்டங்கூட்டமாக வந்தமர்ந்து இன்பப் பொழுது போக்குவர். இதில் மணிக்கூண்டு, பூங்கா, சொற்பொழிவு மேடை ஆகியவை உள்ளன. இங்கே நூறாயிரக் (இலட்சக்) கணக்கான மக்கள் அமர்ந்து சொற்பொழிவு கேட்கலாம் கேட்கின்றனர். இத் திடலின் நான்கு பக்கங்களிலும் நல்ல சாலைகள் உள்ளன. இதைச் சுற்றிலும் பெரிய அலுவலகக் கட்டடங்கள் உள்ளன.