பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலத்தின் பயணமும் துணைகளும்

39


தாழனோடை ஆறு (சேஷ நதி )

‘துணையோடின்றித் தனிவழி ஏகேல்’ என்பதற்கேற்ப, கெடிலத்தின் பயணத்திடையே இரண்டு துணையாறுகளும் பல கால்வாய்களும் வந்து சேருகின்றன. முதல்முதலாகத் திருக்கோவலூர் வட்டத்தில் ‘தாழனோடை’ என்னும் சிறு துணையாறு வந்து கெடிலத்தோடு தென்கரையில் கலக்கிறது. இந்தக் கலப்பு, விழுப்புரம் விருத்தாசலம் புகைவண்டிப் பாதையிடையே பரிக்கல் நிலையத்திற்கும் உளுந்தூர்ப்பேட்டை நிலையத்திற்கும் இடையேயுள்ள பாதூர்ப் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 2 கி.மீ தொலைவு அளவில் மாறனோடை என்னும் ஊருக்கருகில் நிகழ்கிறது, இந்தத் தாழனோடை, தான் கெடிலத்தோடு கலக்கும் பாதூருக்கு மேற்கே ஏறக்குறைய 20 கி.மீ. தொலைவில் - இறையூருக்கும் எலவானாசூருக்கும் இடையேயுள்ள புகைப்பெட்டி, குஞ்சரம் என்னும் ஊர்களின் அருகிலிருந்து தோன்றி வருகிறது. ஒரு சிறிய ஏரிப் பகுதியிலிருந்து தோன்றும் இவ்வோடை, வழியிலும் சில ஏரிகளின் தொடர்புடன் சில கால்வாய்களையும் பெற்று வரவரப் பெரிதாகி 20கி.மீ. பயணத்தின் முடிவில் கெடிலத்தோடு கலந்துவிடுகிறது.

வேறு பெயர்கள்

சிலவிடங்களில் இச்சிற்றாற்றின் இரு கரைகளிலும் தாழை அடர்ந்திருப்பதால் இது தாழனோடை எனப் பெயர் பெற்றது. இந்த ஆறு எந்தெந்த ஊரின் வழியாக வருகிறதோ அந்தந்த ஊர்ப் பெயராலும் அழைக்கப்படுவதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டாக, இது களவனூர் என்னும் ஊர் வழியாக வருவதால் ‘களவனூர் ஆறு’ என அவ்வூர்ப் பக்கத்தில் அழைக்கப்படுகிறது. இஃதன்றி, ‘சேஷநதி’ என்னும் பெயரும் இதற்கு வழங்கப் படுகிறது. புராண நம்பிக்கை அடிப்படையில், கெடிலத்தைக் கருடநதி எனவும் இந்தத் துணையாற்றைச் சேஷநதி எனவும் கொண்டு, கருடநதியும் சேஷநதியும் ஒன்று கூடுவதாகச் சொல்லப்படுகிறது. கருடனும் சேஷனும் (ஆதிசேஷன்) திருமாலுக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றதாகப் புராணக்கதை கூறுகிறதல்லவா?

பாலமும் அணையும்

இந் நீரோட்டம் ஓடை என்னும் பெயரால் அழைக்கப் படினும் கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல வளர்ந்து ஒரு சிறிய ஆறு போலவே தோற்றமளிக்கிறது. திருவெண்ணெய் நல்லூரிலிருந்து களமருதூர் வழியாக உளுந்தூர்ப் பேட்டை