பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

கெடிலக்கரை நாகரிகம்



செயின்ட் டேவிட் கோட்டை

கப்பல் வழியாக வாணிகம் புரிய வந்த ஐரோப்பியர்களைத் தேவனாம் பட்டினம் தீவு கவர்ந்தது. இத்தீவிற்குள் பதினாறாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பியர்கள் புகத் தொடங்கிவிட்டனர்; இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் டச்சுக்காரர் தேவனாம் பட்டினத் தீவின் வடபகுதியில் ஒரு தொழில் நிலையம் நிறுவினர். இவர்கள் சரக்கு விற்பனை புரிந்ததன்றி, அடிமை வாணிகமும் செய்தார்களாம். இங்கிருந்தபடி இந்திய ஏழை மக்களை இந்தோனேசியாவுக்கு அடிமைகளாக விற்றார்களாம். என்னே கொடுமை! அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் உரிமை கொண்டிருந்த மராத்தியர்கள் 1678இல் டச்சுக்காரர்களைத் தேவனாம்பட்டினத் தொழிற் கூடத்திலிருந்து மஞ்சக் குப்பத்திற்கு விரட்டினார்கள்; பின்னர் அங்கிருந்தும் 1745ஆம் ஆண்டளவில் பரங்கிப் பேட்டைக்கு விரட்டினார்கள்.

டச்சுக்காரர் நிலை இவ்வாறு இருக்க, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் தேவனாம் பட்டினத் தீவின் தெற்கு எல்லையில் கெடிலத்தின் வடகரையில் “செயின்ட் டேவிட்” என்னும் கோட்டை கட்டினர். முதலில் ‘எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர், சரக்குகள் வைப்பதற்காக ராமராஜா’ என்பவரிடமிருந்து ஒரு கிடங்கை விலை பேசி வாங்கினார். அதற்கு அண்மையில் “செயின்ட் டேவிட் கோட்டை (Fort St. David) கட்டப்பட்டது. 1683ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, 1693, 1698, 1702, 1725, 1740, 1745 ஆகிய ஆண்டுகளில் மேலும் மேலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டதோடு வலுப்படுத்தவும் பட்டு வந்தது. 1745இல் ராபர்ட் கிளைவ் இதன் காவலில் நன்கு கவனம் செலுத்தினார்.

1745 தொட்டு 1750வரை ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைத் தங்கள் ஆட்சியின் தலைநகராகப் பயன்படுத்தினார்கள். அப்போது சென்னை பிரெஞ்சுக்காரர் கையில் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் சென்னையைக் கைப்பற்றி, செயின்ட் டேவிட் கோட்டைக்கு இருந்த தலைநகர்த் தகுதியைச் சென்னையில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார்கள்.

ஆங்கிலேயர்கள் செயின்ட் டேவிட் கோட்டையை எவ்வளவு விழிப்புடன் காத்துங்கூட, அது பகைவர்களால் பலமுறை தாக்கப்பட்டது. செஞ்சியை யாண்ட தேசிங்கு மன்னன் தந்தையான சாரூப்சிங் என்பவர் 1712ஆம் ஆண்டளவில் இந்தக் கோட்டையை ஒரு கை பார்த்தார்.