பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

கெடிலக்கரை நாகரிகம்



இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் தமிழகத்தின் தலைநகராய்த் திகழ்ந்த செயின்ட் டேவிட் கோட்டை இன்றிருக்கும் நிலை மிகவும் இரங்கத் தக்கது. இடிந்துபோன இந்தக் கோட்டையின் எளிய நிலையைப் பின்வரும் படத்தில் காணலாம்:

இந்தப் படத்தில் உள்ளது, இடிந்து போன கோட்டையின் நடுவிலிருக்கும் ஒரு சிறு பகுதி, ஒரு சிறு அறை போன்று உள்ள இந்தப் பகுதியைக் கொண்டு பழைய செயின்ட் டேவிட் கோட்டையின் அளவையும் தரத்தையும் கணிக்கக் கூடாது. மிகப் பெரிய பரப்பளவில் கோட்டை இருந்தது. கோட்டையின் இடிபாடுகளும் அடிப்படைகளும் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. இப்போது இந்தக் கோட்டைப் பரப்பின் எல்லைக்குள் தனித்தனியாகச் சில கட்டடங்கள் உள்ளன. அவற்றுள், மாவட்ட மருத்துவமனைத் தலைவர் வாழும் கட்டடமும் பாரி கம்பெனியாரின் புதிய விருந்தினர் மாளிகையும் குறிப்பிடத்தக்கன. தென்மேற்கு மூலையில் கெடிலத்தின் ஓரத்தில் இருக்கும் கட்டடப் பகுதி மிகவும் பழமையாய்க் காணப்படுகிறது.

கடலும் கழியும் கெடிலமும் சுற்றியுள்ள சூழ்நிலையில் இருக்கும் கோட்டைப் பகுதி, இப்போது காண்பவர்க்கு, ஒரு காலத்தில் தலைநகராயும் போர்க்களமாயும் இருந்த பகுதியாகத் தோன்றாமல், முனிவர்கள் தவம் செய்வதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலை உடையதாகவே தோற்றமளிக்கும். காலம் செய்யும் கோலம் என்னே!