பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

403



கூடலூர்

கடலூர் என்னும் பெயர் கூடலூர் என்னும் பெயரிலிருந்து தான் வந்தது என்னும் செய்தியும், கடலூர் நகராட்சியின் தலைமையகமும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமை யகங்களும் தொடக்கத்தில் கூடலூரில்தான் இருந்தன என்னும் செய்தியும், கூடலூர்தான் மிகப் பழைய நகர் என்னும் செய்தியும், கூடலூரின் பெயர்க்காரணமும் முன் பக்கங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

கடலூர்ப் புதுநகர்ப் பகுதிக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் - கடலூரின் தெற்கு எல்லையாகக் கூடலூர் முதுநகர் அமைந்துள்ளது. கடலூர்ப் புதுநகர்ப் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சிதம்பரம் செல்லும் மாவட்ட நெடும்பாதையும் நெய்வேலி வழியாக விருத்தாசலம் செல்லும் மாவட்ட நெடும்பாதையும் கூடலூர் வரை ஒரே பாதையாகச் சென்று கூடலூர்க்குத் தெற்கே தனித்தனியாகப் பிரிகின்றன. கூடலூரில் புகைவண்டிச் சந்திப்பு நிலையம் உள்ளது. இச் சந்திப்பிலிருந்து, விழுப்புரம் சந்திப்பு நிலையத்திற்கு ஒரு பாதையும், மாயவரம் சந்திப்பு நிலையத்திற்கு ஒரு பாதையும், விருத்தாசலம் சந்திப்பு நிலையத்திற்கு ஒரு பாதையும், கூடலூர்த் துறைமுகத்திற்கு ஒரு பாதையுமாக நான்கு புகைவண்டித் தொடர்ப்பாதைகள் பிரிந்து செல்கின்றன. துறைமுகம் இருப்பது, கூடலூரின் பழம் பெருந்தொழில் வாணிகப் பெருமைக்குத் தக்க சான்று பகரும். இத் துறைமுகத்தைப் பற்றி இந்நூலில் ‘கூடலூர்த் துறைமுகம்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம்.

கூடலூர் 1803 வரை அரண்மிக்க அரச நகரமாகவே இருந்தது; பின்னர் அரண்கள் பலவும் அழிந்துபட்டன. கூடலூரின் பழைய அரண் மிகு பெருமைக்குச் சான்றாக இப்போது எஞ்சி நிற்பவை இரண்டே யிரண்டு கட்டிடங்களே, அவற்றுள் ஒன்று; ‘கிறைஸ்ட் சர்ச்’ (Christ Church) என்னும் கிறித்துவக் கோயில்; மற்றொன்று; ‘பாக்டறி ஹவுஸ்’ (Factory House) என்னும் தொழிற்சாலை மாளிகை, கிறைஸ்ட் சர்ச் தொடக்கத்தில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவக் குழுவினரிடம் (Jesuits) இருந்தது. அவர்கள் அப்போது நடந்து கொண்டிருந்த ஆங்கிலோ - பிரெஞ்சுப் போரில் பிரெஞ்சுக்காரர்கட்கு உதவியாயிருந்து கொண்டிருந்ததால், அவர்களிடமிருந்து கிறைஸ்ட் சர்ச் 1749 இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, கிறித்துவம் பரப்பும் வேறொரு (Society for the Propagation of Christian Knowledge)