பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

கெடிலக்கரை நாகரிகம்


ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ‘பிராடெஸ்டன்ட்’ (Protestant) என்னும் கிறித்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. இந்தக் கோயிலின் கல்லறையில் ஆங்கிலேயர் பலரின் அடக்கக் குழிகள் உள்ளன; இவர்கள், எங்கேயோ பிறந்து எங்கேயோ வந்து யார் மண்ணுக்காகவோ தாங்கள் போரிட்டு மாய்ந்து போனார்களே - அந்தோ!

அடுத்து, நில அறைகளுடன் கூடிய ‘பாக்டரி ஹவுஸ்’ மாளிகை, 1764 வரை அதன் குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (Collectors), வாணிகப் பேராளர்கள் (Commercial Residents) முதலியோரால் பயன்படுத்தப்பட்டன. 1707 ஆம் ஆண்டளவில், இது, செயின்ட் டேவிட் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கவர்னரின் மாளிகையாகவும் பயன்பட்டது. ஒரு சமயம் ராபர்ட் கிளைவ், தோற்றுப் போன பிரெஞ்சுக்காரர்களை இங்கே சிறைவைத்திருந்ததும் உண்டு. நாளடைவில் இம்மாளிகை மாவட்ட நீதி மன்றமாகவும் சிறைச்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக இம் மாளிகை 1886இல், பாரி கம்பெனிக்கு 10,000 (பத்தாயிரம்) ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றும் இது பாரி கம்பெனியாரின் உடைமையாகவே இருந்து வருகிறது. இங்கே நிலத்தடியிலிருந்து ஒரு பழைய துப்பாக்கி தற்செயலாய்த் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மேடைமேல் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.

கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலர்களின் பிள்ளைகள் படிப்பதற்காகக் கூடலூரில் 1717இல் ஒரு பள்ளி தொடங்கப் பெற்றது. அது நாளடைவில் வளர்ந்து உயர்நிலைப் பள்ளியாயிற்று. 1951 ஆம் ஆண்டுக்கு முன் பள்ளியின் பெயர்: எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளி; அதன் பின் இப்போது பள்ளியின் பெயர்: தூய தாவீது (St. David) உயர்நிலைப்பள்ளி. ஊர் முதுநகராயிருப்பது போலவே இப்பள்ளியும் முதுபள்ளியாயிருக்கிறது. இவ்வூரில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்நகரில் 1879ஆம் ஆண்டில் ‘டவுன் காலேஜ்’ என்னும் பெயரில் ஒரு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுச் சில்லாண்டுகள் நடைபெற்றுப் பின்னர் மறைந்துவிட்டது.

கூடலூரில் பழைய தொழில் - வாணிக வாடை இன்றும் ஓரளவு வீசிக் கொண்டுள்ளது இங்குள்ள பாரி கம்பெனியால் பல்லாயிரவர் தொழில் பெற்றுப் பிழைக்கின்றனர். பாரி