பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

405


கம்பெனியார் பல்வேறு துறைகளில் வாணிகம் புரிவதன்றி, படகு கட்டும் தொழிற்சாலையும் உரத் தொழிற்சாலையுங்கூட நடத்துகின்றனர். கூடலூரில் மணிலா ஆலைகள், கால்நடை உணவுத் தொழிற்சாலை, சோப்புத் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை, பிரிமியர் பெர்டிலைசர்ஸ் உரத் தொழிற்சாலை முதலியவை உள்ளன. நெசவுத் தொழில் இங்கே மிகுதி, தேங்காய் நாரிலிருந்து கயிறு திரித்தலும் கோரைப் பாய் முடைதலும் இங்கே மிகுதியாய் நடைபெறுகின்றன. உப்பளங்கள் மறைந்து வருகின்றன. இங்கே முன்பு ஊசி ஆலை, பருத்தி ஆலை முதலியனவும் இருந்து மறைந்து போயின. மொத்தத்தில் கூடலூரை ‘மொத்த வாணிகம்’ (Whole Sale) நடைபெறும் நகரம் என்று சொல்லலாம்.

கூடலூரில் துறைமுகம் இருப்பதால், அது சார்பான அலுவலகங்களும் இங்கே உள்ளன. துறைமுகத்திற்கருகில் உரத் தொழிற்சாலைகளும் உள்ளன. துறைமுகப் பகுதியை ஒட்டியுள்ள சோனகர் தெரு, வில்லிங்டன் தெரு, கிளைவ் தெரு, இம்பீரியல் ரோடு, சராங்கு தெரு, சமண வேளாளர் தெரு முதலியவை கூடலூரின் வரலாற்றுப் பெருமைக்கும் வாணிகப் பெருமைக்கும் சான்றுகளாய் உள்ளன. துறைமுகப் பகுதியில் பிராடெஸ்டன்ட் கிறித்துவர்களும், உள்நகர்ப் பகுதியில் முசுலீம் மக்களும் மிகுதியாய் வாழ்கின்றனர். இந்து கோயில்களுள், காமாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் ‘கிண்ணித் தேர்விழா’ குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பழம் பெருஞ் சிறப்புகள் பலவற்றிற்கு உரியதான கூடலூர் முதுநகர், இன்று சுருக்கமாகவும் எளிதாகவும் ‘ஒட்டி’ ஒட்டி (O.T. = Old Town) என்று பலராலும் அழைக்கப்படுகிறது. இதுவே, பீஜப்பூர் சுல்தானது ஆட்சிக் காலத்தில் 1640 தொட்டு 1677 வரை ‘இஸ்லாமா பாத்’ எனப் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை அறியும் போது வியப்பாயிருக்கிறது. மற்றும், இந்தக் கூடலூரேயன்றி, மதுரை மாவட்டத்தில் ஒரு கூடலூரும், நீலகிரி மாவட்டத்தில் ஒரு கூடலூரும், உள்ளன. அவற்றினின்றும், பழம்பெரு நகரமாகிய இந்தக் கடலூர்க் கூடலூரை வேறு பிரித்துணர வேண்டும். கூடலூர் கிழார், கூடலூர்ப் பல்கண்ணனார் என்னும் சங்கப் புலவர்கள் எந்த எந்தக் கூடலூரைச் சேர்ந்தவர்களோ?

அக்கரை

கூடலூருக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் முக்கியப் பகுதி இருக்கிறது. அதிலிருந்து ஒரு கிளை பிரிந்து தெற்கு நோக்கி வந்து கூடலூரின் தெற்கு எல்லையில் கடலோடு கலக்கிறது. கெடிலத்தின் இந்தத் தென் கிளைக்கு ‘உப்பனாறு’