பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

கெடிலக்கரை நாகரிகம்


என்பது பெயர். உப்பனாற்றின் மேற்குக் கரையில் கூடலூர் இருக்கிறது கிழக்குக் கரையில் ‘அக்கரை’ என்னும் தீவு இருக்கிறது. அக்கரைக்கும் கூடலூருக்கும் நடுவே உள்ள உப்பனாற்றுப் பகுதிதான் துறைமுகம் எனப்படுவது.

உப்பனாற்றின் இக்கரையில் (மேற்கில்) இருக்கும் கூடலூர் மக்கள், உப்பனாற்றின் அக்கரையில் (கிழக்கில்) இருக்கும் பகுதியை ‘அக்கரை’ என்னும் பெயராலேயே அழைக்கின்றனர். இது நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இதன் கிழக்கே கடலும், வடக்கே கெடிலமும், மேற்கிலும் தெற்கிலும் கெடிலத்திலிருந்து பிரியும் உப்பனாறும் உள்ளன. இத்தீவு ஒரே மணற் பகுதியாக உள்ளது. இத்தீவிலிருந்து கூடலூர்ப் பகுதிக்குப் போகவும் வரவும் உப்பனாற்றில் படகுகள் விடப்படுகின்றன. பள்ளிச் சிறார்கட்கும் நகராண்மைக் கழக ஊழியர்க்கும் படகுக் கட்டணம் இலவசம், தீவு நகராட்சியைச் சேர்ந்ததால், இச்செலவு நகராட்சியால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் மக்கள் தொகை: 1,500

இத்தீவு மக்கள் துறைமுக வேலை, மீன் பிடித்தல், படகுசெய்தல், படகு ஓட்டுதல், கயிறு திரித்தல், பல்வகைக் கயிற்றுப் பொருள்கள் செய்தல் முதலிய தொழில்கள் செய்து வாழ்கின்றனர். படகுகளில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு இலங்கை வரை சென்று மீளும் ஆற்றல் படைத்த படகோட்டிகள் இங்கு உள்ளனர்.

இத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி முதலிய சிற்றுார்கள் உள்ளன. ஒர் ஊருக்கும் மற்றோர் ஊருக்கும் உள்ள இடைவெளி ஒரு பர்லாங்கு அளவு இருக்கலாம். ஒவ்வோர் ஊரும் ஒரு மணல் திட்டுபோல் காட்சியளிக்கிறது.

சோனங் குப்பம்

அயல் நாட்டாரைச் சோனகர் எனக் கூறுவது தமிழ் மரபு. இந்த ஊரில் சோனகர் வாணிகம் புரிவதற்காக வந்து தங்கியிருக்கலாம்; அதனால் இது சோனகர் குப்பம் எனப் பெயர் பெற்று, பின்னர் சோணாங்குப்பம் எனத் திரிந்து விட்டிருக்கலாம். கூடலூருக்குள்ளேயும் ‘சோனகர் தெரு’ என ஒரு தெரு இருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

சிங்காரத் தோப்பு

சிங்காரத் தோப்பு என்றால் இது சிங்காரமான தோப்புதான். தொலைவில் இருந்து பார்ப்பவர்க்கு இஃது ஒரு தோப்பாகத்தான் தெரியும்; உள்ளே வீடுகள் உள்ளன. தீவின் நடுப்பகுதியாகிய இங்கே கலங்கரை விளக்கம் (Light House)