பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கெடிலக்கரை நாகரிகம்


செல்லும் மாவட்டக் குறும்பாதையில் களவனூருக்கு அருகே இந்தத் தாழனோடை ஆற்றுக்குக் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் வழியாகப் பேருந்து வண்டி போக்கு வரவு இப்பொழுது நடைபெறுகிறது. தாழனோடையைக் கடக்கும் இக் குறும்பாதை கெடிலத்தையும் கடக்கிறது; ஆனால், இப் பாதையில் தாழனோடையில் பாலம் உண்டு; கெடிலத்தில் பாலம் இல்லை.

பாதூருக்கு அருகே தாழனோடை ஆற்றில் ஒரு சிறிய அணை கட்டப்பட்டுத் தண்ணீர் பாதூர் ஏரிக்கு அனுப்பப் படுகிறது. திருக்கோவலூர் வட்டத்தில் பாதூர் ஏரி ஒரு பெரிய ஏரியாகும். இவ்வாறாகத் தாழனோடை கெடிலம் போலவே பல ஏரிகளிலிருந்துதான் தண்ணீர் பெறுவதன்றி, தானும் ஏரி நிரப்பும் பணிபுரிகிறது.

மலட்டாறு

அடுத்து, திருக்கோவலூருக்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் வீரமடை, சித்தலிங்க மடம் என்னும் ஊர்களுக்கருகில் தென்பெண்ணை யாற்றிலிருந்து ஒரு சிற்றாறு பிரிந்து வந்து தென்கிழக்காக 35 கி.மீ. தொலைவு ஓடி, கடலூர் வட்டத்தில் அப்பர் பிறந்த திருவாமூருக்கு மேற்கே மிக அண்மையில் கெடிலத்தின் வடகரையில் அதனோடு கலக்கிறது. இந்த ஆற்றிற்கு ‘மலட்டாறு’ என்பது பெயர். மலட்டாறு கெடிலத்தோடு கலக்கிறது என்று சொல்வதினும், ஒரு பாலம்போல் பெண்ணையாற்றையும் கெடிலத்தையும் இணைக்கிறது என்று சொல்லலாம்.

இந்த மலட்டாற்றின் கதையே தனி. இதன் கரையில் தேவாரப் பாடல் பெற்ற பதிகள் மூன்று உள்ளன. இது பெண்ணையாற்றின் பழைய பாதை எனக் கருதப்படுகிறது பெண்ணையாறு தன் பழைய பாதையை மலட்டாறு என்னும் பெயரில் விட்டுவிட்டு வடக்கு நோக்கி வளைந்து வேறு புதிய பாதை அமைத்துக்கொண்டு ஓடுகிறது. முன்பு, பெண்ணை யாற்றுப் பாதையாக இருந்தாலும் இப்போது மலட்டாறு மலட்டாறு தானே!

மலட்டாறு என்னும் பெயரிலிருந்தே அந்த ஆற்றின் வளம் புரிகிறது. மலடு என்றால் பிள்ளை பெறாத்தன்மை என்பது பொருள். இந்த ஆறு, தனக்கெனத் தனித்தன்மை ஒன்றும் இன்றி வேறொரு பெரிய ஆற்றிலிருந்து தோன்றுவதாலும், மழைக் காலத்தில் மட்டும் தண்ணீர் பெற்று மற்ற காலங்களில் வறண்டிருப்பதாலும் மலட்டாறு என அழைக்கப்பட்டது. இது