பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

கெடிலக்கரை நாகரிகம்


சுட்டப்பட்டுள்ளது. கடலூர் - விருத்தாசலம் பாதையிலுள்ள இவ்வூரில் புகைவண்டி நிலையமும் உண்டு. இந் நிலையம் குறிஞ்சிப்பாடி நிலையத்திற்கும் நெய்வேலி நிலையத்திற்கும் இடையில் உள்ளது. ஊர் மக்கள் தொகை: 1750.

வடலூர் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் இங்கே சமரச சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை, அறநெறிச்சாலை ஆகியவை நிறுவியதால் இவ்வூர் உலகப் பெரும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. இந்நிறுவனங்களின் நூற்றாண்டு விழா 1967 இல் நடைபெற்றது. வடலூர் சபை பற்றியும் வள்ளலார் பற்றியும் இந்நூலில் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் - வடலூர் வள்ளலார்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம்.

வடலூரில் ஏராளமான சத்திரங்கள் இருப்பதுடன், தைப்பூச நாளில் சத்திரங்களில் பலர் வந்து இலவசமாக உணவு இடுதலும் குறிப்பிடத்தக்கது. இங்கே, அரசினர் ஆதார ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அரசு அம்பர் சர்க்கா நிலையம், சேஷசாயி குழுவின் மின்சார இன்சுலேட்டர் தொழில்நிலையம், ஓமந்துார் இராமசாமி ரெட்டியார் நிறுவிய வள்ளலார் குருகுலம் - வள்ளலார் குருகுல உயர்நிலைப்பள்ளி - அப்பர் அனாதை மாணவர் இல்லம் - அப்பர் சான்றோர் இல்லம், சேலம் பெருமாள் செட்டியார் அருட்பா பாடசாலை முதலியவை இருப்பது, வடலூரின் இன்றியமையாமையை மேலும் மிகுதிப்படுத்துகிறது. இங்கே முந்திரி எண்ணெய்த் தொழிற்சாலையும் உள்ளது. இவ்வூர் கெடிலத்தின் தென்கரைக்கு 19 கி.மீ. (12 மைல்) தொலைவில் உள்ளது.

மேட்டுக் குப்பம்

இது, வடலூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இராமலிங்க அடிகளார் வடலூரில் ‘சத்திய ஞான சபை’ அமைத்தாலும், அவர் தங்கியிருந்தது இந்த மேட்டுக்குப்பம் ஊரில்தான். இங்கே அவர் குடில் வடிவிலுள்ள ‘சித்திவிளாகம்’ என்னும் பெயருடைய மனையில் தங்கியிருந்தார். அன்பர்கள் இந்தக் குடிலைச் சித்தி விளாக மாளிகை’ எனச் சிறப்புடன் அழைப்பர். வள்ளலார் தம் வாணாளின் இறுதியில் சித்திவிளாகத்திலுள்ள ஓர் அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டதாகவும் பிறகு வெளி வரவேயில்லை என்பதாகவும் கூறப்படுகிறது. இன்றும் பூட்டிய நிலையில் அந்த அறை காட்சியளிக்கிறது. சித்திவிளாகத்தில் அணையாத நந்தா விளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிேயிருக்கிறது; அடிகளார் சுடரொளியில் (சோதியில்) கலந்துவிட்டார் என்பதை அறிவிக்கும் முறையில் இந்தச் சூழ்நிலை அமைந்துள்ளது.