பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

411



வள்ளலார் நீராடியதாகச் சொல்லப்படும் ‘தீஞ்சுவை ஒடை’ மேட்டுக் குப்பத்தில்தான் இருக்கிறது. ஒடையும் ஓடையைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் காண்பதற்கு இன்பமாயுள்ளன. இந்த இடத்தில் இனந்தெரியாத ஒரு புத்துணர்வு தோன்ற்கிறது. “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே...'ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே...” என்னும் அடிகளாரின் அருட்பாவை இங்கே திரும்பத்திரும்பப் பாடவேண்டும் போல் தோன்றுகிறது.

மேட்டுக் குப்பம் ‘கருங்குழி’ என்னும் ஊரைச் சார்ந்த பகுதியாகும். வள்ளலார் கருங்குழியிலும் தங்கிப் பல பாடல்கள் அருளியுள்ளார். கருங்குழியின் மக்கள் தொகை: 3020.

நெய்வேலி

தன்னிடமுள்ள பழுப்பு நிலக்கரிப் படிவத்தால் உலகப் பெரும் புகழ்பெற்றுள்ள நெய்வேலி கடலூர் - விருத்தாசலம் பாதையில் உள்ளது. 1931ஆம் ஆண்டில் கூடலூர் - விருத்தாசலம் புகைவண்டிப் பாதை அமைக்கப்பட்டபோது நெய்வேலியில் நிலையம் இல்லை. 1950இல்தான் இங்கே புகைவண்டிகள் நிற்கத் தொடங்கின. அப்போதும் இங்கே நிலையம் கட்டப்பட வில்லை; ஒரு பழைய ஓட்டைப் புகைவண்டிப் பெட்டி நிலையமாக நிறுத்தப்பட்டு, பயணச் சீட்டு கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருந்தது; இந்த நிலைமை 1958 வரையுங் கூட நீடித்திருந்ததாக நினைவிருக்கிறது. பின்னர்ப் பெரிய அளவில் - ஆறு நூறாயிரம் (6 இலட்சம்) ரூபாய் செலவில் நிலையக் கட்டடங்கள் தொடங்கப்பட்டு 1961இல் கட்டி முடிக்கப்பட்டன.

நெய்வேலி கடலூருக்குத் தென்மேற்கே 35 கி.மீ. தொலைவில் இருந்தாலும், பண்ணுருட்டிப் பக்கமாகக் கெடிலத்தின் தென்கரைக்கு நேர் தெற்கே 20 கி.மீ. தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது; மற்றும், நெய்வேலி நிலக்கரி உள்ள பகுதி, கெடிலக்கரை வரையும் பரந்திருக்கிறது. நிலக்கரியை வெட்டிக்கொண்டு போகப் போக எதிர்காலத்தில் கெடிலத்தை நெருங்க வேண்டியது வந்தாலும் வரலாம். இந்த முறையில், நெய்வேலி நிலக்கரித் திட்டத்துடன் நெருங்கிய தொடர்பும் உரிமையும் கெடிலக்கரைக்கு உள்ளமை புலனாகும்.

சில ஆண்டுகட்குமுன் பொட்டல் வெளியாய்க் கிடந்த நெய்வேலிப் பகுதியில் ஓரிடத்தில் நீர் இறைப்பதற்காக நிலத்தில் குழாய் இறக்கப்பட்டது (தென்னார்க்காடு மாவட்டக் கழகத்தின் தலைவராகவும் கடலூர் நகராட்சித் தலைவராகவும் பணிபுரிந்த சம்புலிங்க முதலியார் என்பவரின் நிலம் என்பதாக நினைவு). உடனே நிலத்திலிருந்து நீர் பீறிட்டுக்கொண்டு